இயற்கை சீற்றம்! மக்களை காக்கும் செயற்கைகோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும் 377 கிலோ எடை கொண்ட ‘ஸ்கேட்சாட்–1’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி – சி 35 ராக்கெட் செலுத்தப்பட்ட 17ஆவது நிமிடத்தில் அதன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை இன்று தேதி   September 26, 2016    காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இது 37ஆவது ராக்கெட் ஆகும். ஸ்கேட்சாட்–1 செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதனுடைய ஆயுள்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

இதனுடன் பி1–சாட், பிரதாம், பாத்பைண்டர்–1, அல்சாட்–1பி, அல்சாட்–2பி, அல்சாட்–1என், கேன்எக்ஸ்–7 ஆகிய செயற்கைகோள்களும் செலுத்தப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்களும், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும். பருவநிலை மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறியும் வகையில் ஆஸ்கேட்-2 என்ற செயற்கைகோளை இஸ்ரோ கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி விண்ணில் நிலை நிறுத்தியது.

ஒடிசா கடற்கரை பகுதியில் பாஃலின் புயல் எச்சரிக்கையை ஆஸ்கேட்-2 அளித்த தகவல்களுடன் இஸ்ரோ முன்கூட்டியே துல்லியமாக தெரிவித்தது. இதனால் பல உயிர்கள் அப்போது காப்பாற்றப்பட்டது.

இந்த ஆஸ்கேட்-2 செயற்கைகோளின் ஆயுட்காலம் 2014 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இதே வகையில் மற்றொரு செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்து ஸ்கேட்சாட்-1 என்ற செயற்கைகோள் தற்போது விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த முறை அனுப்பிய ஆஸ்கேட்-2 செயற்கைகோளை விட, அதிநவீன கருவிகள் தற்போது அனுப்பப்பட்டுள்ள ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன. இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இது புயல், பருவநிலை தொடர்பான சிக்னல்களை அனுப்பி மக்களைப் பாதுகாக்க உதவும்.

Leave a Reply