ஆகஸ்ட் 30: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபருமான வாரன் பஃபெட் பிறந்த தினம் இன்று

ஆகஸ்ட் 30: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபருமான வாரன் பஃபெட் பிறந்த தினம் இன்று (1930)
பங்கு சந்தையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் உதாரணமாக கட்டுவது வாரன் பஃபெட்டைதான்.
வாரன் பஃபெட்: 5 முதலீட்டு ரகசியங்கள்!
1 பங்குச் சந்தை முதலீடு, ரியல் எஸ்டேட் மாதிரி!
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தொகையை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுபோல நினைத்துக்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட்டில் போடும் பணம் குறுகியகாலத்திலேயே லாபம் சம்பாதித்துத் தரும் என எதிர்பார்க்க மாட்டோம். அதுபோலத்தான் பங்குச் சந்தையும். குறுகியகாலத்தில் சில ஏற்றஇறக்கங்கள் வந்தாலும், நீண்ட காலத்தில் லாபம் தரக்கூடியமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.
2  குறைந்த விலை – வாங்கு; அதிக விலை – விற்றுவிடு!
என் பண்ணை அருகில் இருப்பவர் தினமும் தனது நிலத்தை விற்கப்போவதாகச் சொல்கிறார். சொல்லும் விலை மிகக் குறைவாக இருந்து, என்னிடம் கொஞ்சம் உபரிப் பணம் இருந்தால், உடனே அதை வாங்கிவிடுவேன். அவர் சொல்லும் விலை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால் என் பண்ணையை விற்றுவிடுவேன். பங்குச் சந்தையிலும் இதைத்தான் செய்ய வேண்டும்.
3 நேர விரயம் தவிர்க்க செய்தி சேனல் ஆஃப்!
பரந்துபட்ட பொருளாதாரம் பற்றிய கருத்துகள், மேக்ரோ பொருளாதாரம், தொழில் மற்றும் பங்குச் சந்தை கணிப்புகளை எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதால்  நேரம்தான் விரயம் ஆகும்.
இவை உண்மையில் முக்கியம் வாய்ந்த உங்களின் கருத்தை மாற்று வதாக இருக்கும். எனவே, மேக்ரோ செய்தி தொலைக்காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
4 ஊக வணிகம் வேண்டாம்… உற்பத்தி திறனில் கவனம்!
விளையாட்டு மைதானத்தில் கவனம் செலுத்தும் விளையாட்டு வீரர்கள் மட்டும்தான் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். ஸ்கோர் போர்டில் கவனம் செலுத்துபவர்கள் ஒருபோதும் ஜெயிக்க மாட்டார்கள்.
எனவே, முதலீட்டாளர்கள் ஊகத்தின் அடிப்படையில் பங்கின் விலை உயருமா, இல்லை இறங்குமா என்பதைக் கவனிப்பதற்குப் பதில் சொத்தின் எதிர்கால உற்பத்தித் திறனில் கவனம் செலுத்துவது சாலச் சிறந்த யோசனையாக இருக்கும்!
5 உடனடி லாபத்துக்கு உடனே சொல்லுங்க ‘நோ’!
உடனடி லாபம் கிடைக்கும் என்று யாராவது உங்களிடம் வாக்குறுதி அளித்தால், உடனடியாக ‘நோ’ என்று சொல்லிவிடுங்கள். மதில்மேல் பூனைபோல உட்கார்ந்துகொண்டு, அந்தப் பக்கம் குதிக்கலாமா, இந்தப் பக்கம் குதிக்கலாமா என்று மனத்தை அலைபாயவிடாமல், உறுதியாக இருந்திடுங்கள்.
#WarrenBuffett

Leave a Reply