அமெரிக்க அதிபரை எப்படித் தேர்வுசெய்கிறார்கள்?

அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. அதிபர் வேட்பாளர், நாட்டின் ஒட்டுமொத்தப் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர், மாகாணங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ‘தேர்வு செய்வோர் அவை’யிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு மாகாணத்திலும் அதன் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த ‘தேர்வு செய்வோர் அவை’யின் உறுப்பினர்கள் இருப்பார்கள். எல்லா மாகாணங்களும் சேர்ந்து மொத்தம் 538 உறுப்பினர்கள். இவர்களில் 270 உறுப்பினர்களின் வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற்றால்தான் வெல்வார். நாட்டில் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, அதே சமயத்தில் சில மாகாணங்களில் தோற்றதன் மூலம், இந்த ‘தேர்வு செய்வோர் அவை’ வாக்குகளில் தேவைப்படும் 270 வாக்குகளைப் பெற முடியாமல் தோற்றவர்களும் உண்டு. 2000-ல் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராகப் போட்டியிட்ட அல் கோர் இப்படித்தான் தோற்றார்.

நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருந்தாலும், தேர்தலை நடத்தும் பொறுப்பு மாகாணங்களிடமே இருக்கின்றது என்பது சுவாரஸ்யம். தேர்தலில் தங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் மாகாணங்களைப் பொதுவாகக் கட்சிகள் குறி வைப்பதில்லை. உதாரணமாக, ஜனநாயகக் கட்சியின் கோட்டைகள் என்று வரலாற்று ரீதியாகக் கருதப்படும் கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற மாகாணங்களிலோ, அல்லது குடியரசுக் கட்சி பலமாக இருக்கும் டெக்ஸாஸ் போன்ற மாகாணங்களிலோ சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரச்சாரங்களைப் பெரிய அளவில் பார்க்க முடியாது.

வாக்காளர்கள் வரலாற்றுரீதியாக மாறி மாறி வாக்களித்து வருகிற பாணியில் சுமார் 11 மாகாணங்கள் உள்ளன. பொதுவாக, ஒஹையோ, ஃப்ளோரிடா, கொலராடோ விஸ்கான்ஸின், மிச்சிகன் போன்ற மாகாணங்கள்தான் அவை. அவற்றில் 96 ‘தேர்வு செய்வோர் அவை’க்கான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளை வாங்குவதற்குத்தான் பொதுவாக அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களும் கடுமையாக முயல்கின்றனர். அதைத்தான் நாம் இங்கு அமெரிக்காவின் தேர்தல் செய்திகளாகப் படித்துவருகிறோம்.

Leave a Reply