அன்று இவர் இல்லையெனில், இன்று காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லை!

மேஜர் சோம் நாத் ஷர்மா நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

ஜம்மு-காஷ்மீர்…

இந்திய தேசத்தின் தலைப்பகுதி… சீறிப்பாயும் நதிகள், அழகிய பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், தரை விரிப்புகளாக பூத்துக் குலுங்கும் வண்ண வண்ணப் பூக்கள், மிக நீண்டு வளர்ந்த தேவதாரு மரங்கள், சில்லிடும் குளிர்காற்று என மனதை கொத்தாகக் கொள்ளையடிக்கும் ‘பூமியின் சொர்க்கம்’. இது இந்தியாவின் பனி மகுடம் மட்டுமல்ல மணிமகுடமும் கூட…

இன்று காஷ்மீரை பிரித்து பாகிஸ்தான் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு எப்படி துடிக்கிறது? காஷ்மீரில் கலவரங்கள் மற்றும் தீவிரவாதிகளை எப்படித் தூண்டி விடுகிறது? இவை அனைத்தும் நாம் அறிந்த ஒன்றே! இதற்கு முன் காஷ்மீருக்காக, பாகிஸ்தான் 1947, 1965, 1971, மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா மீது நேரடியாக போர் தொடுத்ததும் நாம் அறிந்ததே. ஆனால், அனைத்துப் போரிலும் நாம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, இன்றுவரை காஷ்மீருக்கான சண்டை நின்றபாடில்லை. காஷ்மீரை பாகிஸ்தான் கைகளுக்குச் செல்ல விடாமல், இந்தியாவுக்கே பெற்றுத் தந்த பெருமை வரலாற்றில் இன்றைய தினத்துக்கு மட்டுமே உண்டு, ஆம். காஷ்மீரைக் காப்பதற்காக பல நூறு பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்று குவித்தும், அந்நாட்டுப் படையை புறமுதுகிட்டு ஓடச் செய்தும் இந்திய வரலாற்றில் தனக்கென தனி இடம் பதித்த மேஜர் சோம் நாத் ஷர்மா நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த தினம் இன்று.

இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பரம்வீர் சக்ரா’ விருதை வாங்கிய முதல் மாவீரரும் இவரே… இவரைப்பற்றியும், காஷ்மீர் நமது கைக்கு வந்த கதையையும் தெரிந்து கொள்ள, மனதை அகலப்படுத்தி, வரலாற்றில் சிறிதுதூரம் பின்னோக்கி பயணிப்போம்..

அதுவரை., ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரண்டு பிள்ளைகள், ஒன்றாகவே இருந்தனர். ஆங்கிலேயர்களின் வஞ்சகத்தால் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒன்றாகவே இருந்த நாடு இரண்டாகப் பிரிந்து இந்தியாவாகவும், பாகிஸ்தானாகவும் உருவானது. ஒரு வீட்டில் பாகப்பிரிவினை நடந்தாலே பெரிய பெரிய சிக்கல்கள் வரும். அப்படி இருக்க இரு நாட்டுக்குள் பாகப்பிரிவினை ஏற்ப்பட்டால்… அப்போதுவரை ஒன்றாக இருந்த ராணுவம், நாட்டின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள், எல்லைக்கோடு என்று ஒரு மாபெரும் விவாதமே நடைபெற்றது.  பாகிஸ்தானுக்கு சுமார் ஒன்றரை கோடி மக்கள் பயணப்பட்டார்கள். இதுவரை உலகம் இப்படி ஒரு மனித இடப்பெயர்ச்சியை கண்டதே இல்லை. இந்த நிலையில் சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்த குருநிலங்களாலும் பலப் பல பிரச்னைகள் ஏற்பட்டன. தங்களுக்குப் பிடித்த நாட்டுடன் அரசர்கள் தங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளலாம் என ஆங்கிலேயர்கள் சொல்லி விட்டனர், இதனால் பல குறுநில மன்னர்கள் இந்தியாவுடன் இணைந்தனர். ஆனால் காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரி சிங் யாருடனும் சேராமல் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு மிகப் பெரிய காரணம் இருந்தது. பதற்றம் தணிந்தவுடன் எப்படியாவது காஷ்மீரை தனிநாடாக மாற்றி விடலாம் என்பதுதான் அவரது எண்ணம்

அப்போது பாகிஸ்தான் தன் நாட்டு ராணுவத்தைக் கொண்டு ஒரு சதிச் செயல் செய்ய துணிந்தது. எப்படியாவது காஷ்மீரை கைப்பற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் பல ராணுவ வீரர்களை பயங்கர ஆயுதங்களோடு வட காஷ்மீருக்குள் அனுப்பியது. அந்த ராணுவத்தினர் கொலை, கொள்ளை போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டனர். அவர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத மகாராஜா ஹரி சிங், இந்தியாவிடம் “என்னை காப்பாற்றுங்கள்” என கதறினார். இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் வி.பி.மேனனையும், அப்போதைய ராணுவ லெஃப்டினன்ட் சாம் மானக்ஷாவையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர்.

1947-ம் வருடம் அக்டோபர் 26-ம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைய சம்மதிக்கிறேன் என்று மகாராஜா ஹரிசிங், சர்தார் பட்டேல் முன்னிலையில் கையொப்பமிடுகிறார். இனி நடக்கப்போவது பாகிஸ்தானுக்கும், காஷ்மீருக்கும் இடையேயான சாதாரண யுத்தமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கப்போகும் தர்ம யுத்தம்…

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரைச் சுற்றியுள்ள  பாகிஸ்தான் ராணுவத்தினரை அடித்து விரட்டுவதற்காக சிறப்பு வாய்ந்த குமோனி படைப்பிரிவை ஸ்ரீநகருக்கு அனுப்பத் தயாராகிறது இந்திய அரசு.

குமோனி…

1942-ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தின்போது பர்மாவில் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டு பல சாதனைகளைச் செய்த ஹைதராபாத் படைப்பிரிவே பின்னாளில் குமோனி என பெயர் மாற்றம் பெற்றது. இந்த குமோனி படைப் பிரிவுக்கு தலைமையேற்று இந்திய தேச சரித்திரத்தையும், பூகோளத்தையும் மாற்றியதுடன், ஸ்ரீநகரை மீட்டு அந்நியர்களை விரட்டியடித்த பின்புதான் திரும்பி வருவேன் என்று கர்ஜித்த மேஜர் சோம்நாத் ஷர்மா, 70 துருப்புகளுடன் விமானத்தில் ஏறுகிறார். ஒரு மாபெரும் வெற்றிப்பரிசை இந்தியாவுக்கு கொடுக்கப்போகும், மேஜர் ஷர்மா எனும் ஒருவீரப் புதல்வனை இந்தியா இன்னும் சில மணித்துளிகளில் இழக்கப் போகிறாள் என்பது தெரியாமல் அந்த விமானம் விண்ணில் சீறிப் பாய்கிறது

மேஜர் சோம்நாத் ஷர்மா…

1922-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள், ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஏ.என்.ஷர்மா, தாய் லீலா தேவி. இவரின் தந்தை ராணுவ டாக்டர். இளம் வயதிலிருந்து ராணுவத்தில் சேரத் துடித்த மேஜர் ஷர்மா ஷெர்வுட் கல்லூரியில் படித்த பின்னர், ராணுவக் கல்லூரியில் சேர்கிறார். அங்கு அனைத்துத் தேர்வுகளிலும் இவரே பெஸ்ட். அதனால் தனது 19- வது வயதில், 1942-ம் ஆண்டு ஹைதராபாத் படைப் பிரிவில் தேர்வாகி பின் அப்படைபிரிவுக்கு தலைவரானார். இவரின் சகோதரர் யார் தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன் இந்தியத் ராணுவ தளபதியாக பதவி வகித்த ஜெனரல் விஸ்வநாத் ஷர்மா தான். எனவே ராணுவப் பாரம்பரியம் இவர்களின் குடும்ப ரத்தத்திலே ஊறிப் போன ஒன்று.

மேஜர் ஷர்மா தனது துருப்புகளுடன் விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோதே, அவரது எண்ணம் எல்லாம் ஸ்ரீநகரை மீட்டு காஷ்மீரை இந்தியாவுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதுதான். எந்தவொரு அசம்பாவிதம் நடந்தாலும், அது வெற்றி வாகை சூடிய பின் தான் நடக்க வேண்டும் என்று ஷர்மா எண்ணுகிறார்.

ஸ்ரீநகருக்கு செல்லும் முன் தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கச் செல்கிறார் ஷர்மா. ஆனால் அவரது தாய் மறுத்து விடுகிறார். காரணம் இரண்டாம் உலகப் போரின்போது நடந்த யுத்தத்தில், இவரின் கை முறிந்து விடுகிறது, இன்னமும் கை சரியாகவில்லை. இதை மனதில் கொண்டே தாயார் அனுமதி வழங்கவில்லை, “அம்மா புரிஞ்சிக்கோங்க. கை உடைந்த நிலையில் சண்டைக்கு செல்லக்கூடாது என ராணுவ உயரதிகாரிகள் தடுத்தார்கள், நான்தான் என்னால் முடியும், எனது படை தான் ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டும் என்று கஷ்டப்பட்டு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றேன், அதனால் எனக்கு அனுமதி தாருங்கள், என தன் தாயாரிடம் கெஞ்சினார்” அவர். நினைவுகளையும், வெறியையும் சுமந்து வந்து கொண்டிருந்த மேஜர் ஷர்மாவை விமானம் இரவுப்பொழுதில் ஸ்ரீநகர் விமான தளத்தில் இறக்கி விட்டது

உயரதிகாரிகள் மேஜர் ஷர்மாவுக்கு கட்டளை இடுகிறார்கள். “நாம் நினைத்தது போல் இங்கு நிலைமை இல்லை பல ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இங்கு உள்ளனர். இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றால், இன்று ஒரு இரவு எப்படியாவது இந்த விமான தளத்தை பாதுகாக்க வேண்டும், நாளை இந்திய ராணுவத்தின் பெரும் பகுதியை வரச் சொல்லலாம்” என்கிறார். காரணம் இந்த விமான தளத்தை நாம் கைப்பற்றினால் தான் நாளை இந்திய ராணுவம் அதில் தரையிறங்க முடியும், மாறாக விமானதளம் பாகிஸ்தானின் கைக்குள் சென்றால் இந்திய ராணுவத்தால் ஸ்ரீநகருக்குள் வரவே முடியாது. இருப்பதோ ஒரே ஒரு விமானதளம், அதையும் எதிரிகளிடம் பறிகொடுத்தால் எப்படி? பிரச்னையின் தீவிரத் தன்மை இப்போதுதான் மேஜர் ஷர்மாவுக்கும் அவரது துருப்புகளுக்கும் தெரிய வருகிறது. நம்மிடமோ 70 வீரர்கள், எதிரிகளிடமோ 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள். கூடவே ஆயுதங்களும் அதிகம், நம்மிடம் அதிக அளவிலான ஆயுதங்களும் தோட்டாக்களும் இல்லை. அறையில் ஒரே நிசப்தம்…

ஆயுதங்களை எவ்வாறு நுணுக்கமாக பயன்படுத்த வேண்டும், தோட்டாக்களை எவ்வாறு வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று சில குறிப்புகள் சொல்கிறார். சற்று தூரத்தில் எதிரிகள் ஆர்ப்பரித்த வண்ணம் வந்து கொண்டிருக்கின்றனர். கடைசியாக தனது வீரர்களை நோக்கி “நாம் அனைவரும் இந்தியத் தாயின் செல்லப் பிள்ளைகள், அவ்வளவு எளிதில் மரணம் நம்மை நெருங்க அவள் ஒரு போதும் அனுமதி தர மாட்டாள்! சண்டையிட்டு வெல்வோம் அல்லது போராடி வீழ்வோம்” என்ற கர்ஜனையோடு எதிரிகளின் மீது திடீர் தாக்குதல் நடத்தினார் மேஜர். ஸ்ரீநகர் விமான தளமே போர்களமாக மாறியது.

எதிரிகள் சுற்றி வளைக்க, சராமாரியாக சுட்டுத் தள்ளுகிறார்கள் மேஜர் ஷர்மாவும், அவரது படையினரும். இடையிடையே தனது வீரர்களுக்கு “முன்னேறி செல்லுங்கள், நாம் இந்தியத் தாயின் புதல்வர்கள்” என்று புத்துணர்ச்சியும் கொடுக்கிறார். ஒவ்வொரு பதுங்குமிடத்தையும் தாவித் தாவி வெறி பிடித்த வேங்கைபோல் சுட்டுத் தள்ளுகிறார். தேவையான தோட்டாக்களை, தனது துப்பாக்கியில் தானே நிரப்பி முன்னேறுகிறார். உடைந்த கையோடு எதிரிகளை திக்குமுக்காடச் செய்கிறார்

“முன்னேறுங்கள், இன்று ஒரு இரவைச் சமாளித்தால், நாளை காலை நமது பெரும் படை வரும், அதன்பின்னர் இவர்களை மொத்தமாக அழித்து விடலாம்” என்ற அவரின் குரல், பனிக் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் தோட்டாக்களின் சத்தத்தை விட அதிகமாக ஆகாயவெளியில் கர்ஜித்துக் கொண்டே இருந்தது.

“எங்களின் உடலில் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடிக் கொண்டே இருப்போம், சோர்வடைய மாட்டோம், கவலை வேண்டாம்” – இதுதான் மேஜர் ஷர்மா வயர்லஸில் அதிகாரிகளுக்குக் கொடுத்த கடைசி தகவல். இவரது வியூகம் மிகச் சரியாக இருக்க எதிரிகள் சோர்வடைந்து விட்டனர். சூரியன் உதிக்கும் நேரம் வரை நடைபெற்ற சண்டையைத் தொடர்ந்து, நமது பெரும் படை ஶ்ரீநகர் விமான நிலையத்துக்குள் நுழைந்தது. அனைவரும் மேஜர் ஷர்மாவை தேடுகிறார்கள், அங்கே அவர்கள் கண்ட காட்சி… அனைவராலும் நம்பமுடியவில்லை, சிலர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பலர் அழுதே விட்டனர்.

ஆம். மேஜர் சொல்லியது போலவே அவரை இந்தியத் தாய் தனது மடியில் ஒரு குழந்தை போல ரத்த கம்பளத்துடன் படுக்கவைத்து இருந்தாள். துப்பாக்கியை தனது நெச்சில் சாய்த்தபடி பிடித்து மேஜர் மீளா நித்திரையில் இருந்தார்.  யுத்த களத்தில் ஒரே நிசப்தம். வீரர்கள் கதறி அழும் சத்தம் வானை எட்டியது. கோபத்தில் அனைவரும் வெறி பிடித்தவர்கள் போல், எதிரிகளைத் தாக்குகிறார்கள், சற்றும் எதிர்பாக்காத இந்த அசுர தாக்குதலால் எதிரிகள் மண்ணில் சரிந்தனர். ஆயிரக்கணக்கில் வந்த எதிரிகள் புறமுதுகிட்டு ஓடத் தொடங்கினர்

வெறும் 70 வீரர்களோடு, பல எதிரிகளைக் கொன்று, ஆயிரத்துக்கும் அதிகமான எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த, மேஜர் சோம் நாத் ஷர்மா தன் இன்னுயிரை கொடுத்தேனும் காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் சேர்ப்பேன் என்று சத்தியம் செய்திருந்தார். அதை செய்தும் காட்டினார். அன்று இரவு மேஜர் ஷர்மா ஸ்ரீநகரில் இல்லையென்றால், இன்று நமக்கு காஷ்மீர் இல்லை என இந்திய ராணுவ வரலாற்றில் இன்னமும் பொறிக்கப்படாத வாசகம் தாரக மந்திரமாக உள்ளது. இவரின் இந்த மாபெரும் வீரத்தைப் பாராட்டி, இந்திய அரசு ராணுவத்தினருக்கான மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதை வழங்கி கௌரவித்தது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு நடந்த முதலாவது யுத்தத்தில் ஸ்ரீநகரைக் கைப்பற்றி, இந்தியாவுக்கு முதல் வெற்றியைத் தேடித் தந்ததுடன், தன்னுயிரையே ஈந்து, வரலாற்றில் நீங்காப் பெருமையையும், வீரத்தையும் நிலைநாட்டிய மேஜர் சோம்நாத் ஷர்மாவின் தியாகத்தைப் போற்றி, இந்தியர்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான வீர வணக்கங்களை செலுத்துவோம்!

Vikadan

Leave a Reply