அட்சய திருதியை

அட்சயம் என்றால் குறையாதது, வளர்ந்துகொண்டே இருப்பது என பொருள். அள்ள அள்ள குறையாமல் தருகிற பாத்திரத்தை அட்சய பாத்திரம் என்கிறார்களே, அதுபோல. இன்றைய தினத்தில் நாம் எது செய்தாலும் அது ஒன்றுக்கு, பத்தாக பல மடங்கு பெருகி நமக்கு வளமும், நலமும் சேர்க்கும் என்பது சாஸ்திர வேத வாக்காகும்.

பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் என்று ரமண மகரிஷி கூறுவார். இல்லாதோர், இயலாதோருக்கு அவர்களது தேவையறிந்து செய்யும் எல்லா வகையான உதவிகளும், பல மடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும். உதவி பெற்றவர்கள் மனப்பூர்வமாக வாழ்த்துவது நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் குவிக்கும். நாம் செய்யும் நல்ல காரியங்கள் பல மடங்காக பெருகி பலன் தருவதுடன், மேலும் தான, தர்மங்கள் செய்வதற்கான வளர்ச்சியை ஏற்படுத்தித் தரும்.

இந்த நாளில் நாம் எது செய்தாலும் பலமடங்காக பெருகும் என்பதால் தங்கம், வெள்ளி நகைகள், ஆடை, ஆபரணங்கள் வாங்க சிறந்த நாளாக கூறப்படுகிறது. நகைகள், ஆடம்பர பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. அது சமீபகாலத்தில் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட வழக்கம்.

வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மங்கல காரியங்களுக்கு தேவையான பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், கருவிகள், கம்ப்யூட்டர் போன்றவை, வியாபாரத்துக்கு தேவையான புதிய தொழில் கருவிகள் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம்.

வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். நம் எதிர்கால வாழ்வுக்கு பலன்தரக்கூடிய வகையில் முதலீடுகள் செய்யலாம். வீட்டுக்கும் குடும்பத்துக்கும் ஐஸ்வர்யம் சேரக்கூடிய, எல்லாருக்கும் ஆயுள், ஆரோக்கியம் தரக்கூடிய பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள் போன்றவற்றை துவங்கலாம். கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரலாம். அட்சய திருதியை நன்னாளில், பொதுநலத்துடன் கூடிய காரியங்களை செய்வது இன்னும் சிறப்பு.

அட்சய திருதியையின் அம்சமே கஷ்டப்படுவோருக்கு உதவுவதுதான். முக்கியமாக கஷ்டப்படும் நோயாளிகளுக்கு உதவுவது மிக சிறந்த தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வேட்டி, புடவை, போர்வை தானமாக தரலாம். ஏழை மாணவரின் கல்விக்கு உதவலாம். ஏழை கர்ப்பிணிகள், சிரமப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்யலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அங்கிருக்கும் குழந்தைகள், முதியவர்களுக்கு உணவு, இனிப்புகள் வழங்கலாம்.

இன்னொரு உயிரை வாழவைக்கக்கூடிய வகையில் ரத்ததானம் செய்யலாம். வெயிலில் களைத்து வருபவர்களுக்கு நீர்மோர், கரும்புச்சாறு, ஜூஸ், பழ வகைகள் வழங்கலாம். பக்தர்கள், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இதுதான் செய்ய வேண்டும் என்று வரையறை இல்லை. எது செய்தாலும் அதனால் கிடைக்கும் பலனும் புண்ணியமும் பல மடங்காக பெருகும் என்பதை மனதில் வைத்து எந்த நல்ல காரியமும் செய்யலாம்.

அட்சய திருதியை பற்றிய புராணக்கதைகளும் உண்டு.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலன். வறுமையில் வாடுகிறார். கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்க வருகிறார். கண்ணனுக்கு பிடித்தமான அவலை மேலாடையில் முடிந்து எடுத்து வருகிறார். அவரை அன்போடு உபசரிக்கிறான் கண்ணன். அவர் கொண்டு வந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்துப் போடுகிறான்.

அவர் கஷ்டப்படுவதை உணர்ந்துகொண்ட கண்ணன், ‘அட்சயம் உண்டாகட்டும்’ என்று கை உயர்த்தி வாழ்த்துகிறான். அதே கணத்தில், குசேலனின் குடிசை வீடு மாடமாளிகையாக மாறுகிறது. அவரது வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிரம்புகின்றன. இன்னொரு பிடி அவலை கண்ணன் எடுக்க முற்பட, தின்னவிடாமல் தடுக்கிறாள் ருக்மணி. சாட்சாத் மகாலட்சுமியின் அம்சமான அவளிடம் காரணம் கேட்கிறான் கண்ணன். ‘‘அன்புடன் கொடுத்த அவலை ஒருபிடி தின்றதற்கே குசேலனுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி விட்டீர்கள். இன்னும் ஒரு பிடி தின்றால் லட்சுமி தேவியான நானே குசேலன் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான்’’ என்கிறாள். குசேலன் கேட்காமலேயே அவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் கொடுத்து அருளியவன் கண்ணன்.

வீடு திரும்பிய பிறகுதான் இவை அனைத்தும் குசேலனுக்கு தெரிய வருகிறது. அவருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை.
இதுதவிர, பலர் நிறைந்திருக்கும் சபையில் திரவுபதியின் மானம் காத்து ஆடை வழங்கியது, சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்து, திரவுபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்தது ஆகியவையும் இந்த நாளில்தான். மதுரை மீனாட்சி & சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள், தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள். சங்கநிதி, பத்மநிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள் என பல்வேறு பெருமைகள் அட்சய திருதியைக்கு உண்டு. இந்த நன்னாளில் நல்ல காரியங்கள் நிறைய செய்து, நற்பலன்கள் பெருவோமாக.

Leave a Reply