வரம்

விக்டர் ப்ராங்ள் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய மனோதத்துவ நிபுணர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படையினரின் சித்தரவதைக் கூடங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தவர்.

அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது.

ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் அவரை தொலைபேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொன்னாள். அவள் கூறுவதை பொறுமையாக கேட்ட விக்டர் அவளுக்கு பலவிதங்களில் ஆறுதல் சொல்லி தற்கொலை என்பது கோழைத்தனமானது என்று எடுத்துக்கூறி அவள் ஏன் உயிர் வாழவேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களை அவளிடம் சொன்னார். இறுதியில் நான் தற்கொலை செய்த்துக்கொள்ள மாட்டேன் என்று அவரிடம் உறுதி கூறியவள் அந்த வார்த்தையை காப்பாற்றினாள்.

பிற்காலத்தில் அவளை சந்தித்தபோது விக்டர் ப்ராங்ள் அவளிடம் “என்ன காரணத்தினால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டீர்கள்? நான் கூறிய எந்த விஷயம் உங்கள் மனதை மாற்றியது?” என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண் , “எதுவும் இல்லை” என்றாள் .

“அப்போ வாழவேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்ததற்கு எது தான் காரணம்?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.

அவள் கூறிய பதில் மிகவும் சிம்பிள். “அந்த நள்ளிரவு நேரத்திலும் நான் கூறுவதை காதுகொடுத்து நீங்கள் கேட்டீர்களே அது தான் காரணம்” என்றாள்.

நமது வலியை துன்பங்களை சொன்னால் அதைக் காது கொடுத்து கேட்பதற்கு ஒருவர் இருக்கிறாரே இது எத்தனை பெரிய வரம் என்று தோன்றியதாம் அந்தப் பெண்ணுக்கு. ஆம்… எத்தனையோ வசதிகள் இருந்தும் இந்த ஒரு வரம் இன்றி வாடுபவர்கள் உலகில் கோடிக்கணக்கில் உண்டு.

சற்று யோசித்துப் பாருங்கள்… ஒரு மனோத்தத்துவன் நிபுணர் “வாழவேண்டும்… உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது” என்று வலியுறுத்த எத்தனை விஷயங்களை, வாதங்களை கூறியிருப்பார். ஆனால் அதெல்லாம் இங்கு வேலை செய்யவில்லை. அந்தப் பெண்ணின் வார்த்தைகளை காது கொடுத்து பொறுமையுடன் கேட்டது தான் இந்த மகத்தான பணியை செய்திருக்கிறது.

எனவே சில நேரங்களில் மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பதும் கூட மிகச் சிறந்த அன்பளிப்பு தான்.

மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது எந்த திசையில் போகும் என்று சொல்ல முடியாது. யாருக்கு எப்போது வேண்டுமானாலும் இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம். எனவே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்போம். உங்கள் புத்தி சாதுர்யத்தை காண்பிக்கும் விவாதங்களை விட இது தான் மிக முக்கியம். ¶¶

Leave a Reply