பத்தடி தூரம்

​<3 ஒரு  எளிய விவசாயி, அவன் வாழ்நாளில்  முதல் முறையாக ஒரு  மலைக்குச் சென்று கொண்டிருந்தான். 

         

அவனுடைய  வயலிலிருந்து அந்த  மலையின் பசுமை  நிறைந்த  உச்சிகள் தெரிவதால், அவனுள் அடிக்கடி  அவற்றை அருகில்  சென்று  பார்க்க வேண்டும்  என்று  எண்ணம் ஏற்பட்டது.  

ஆனால் ஏதோ காரணங்களினால் அவனது பயணம் ஒத்திப் போடப்பட்டு வந்ததால் அவன் அங்கு  செல்ல முடியவில்லை.  

         

சென்ற முறை அவனிடம்  ஒரு விளக்கு இல்லை என்பதற்காக அவன் மலைக்குச் செல்வது தடைப்பட்டு விட்டது.  

ஏனெனில் இரவே மலையைச் சென்றடைவது மிகவும்  அவசியம்.  
சூரிய உதயத்திற்குப் பிறகு  அந்த கடினமான மலை மீது ஏறுவது சிரமம். 

          

இப்போது அவன் தன்னுடன் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான். 
மேலும் மலையில் ஏறவேண்டும் என்ற அவாவினால் அவன் இரவில்  தூங்கவும் இல்லை.

         

அவன் இரவு இரண்டு  மணிக்கு  எழுந்து  மலைக்குப் புறப்பட்டான். 
ஆனால் கிராமத்தை விட்டு  வெளியில் வந்ததும் அவன் தயங்கி நின்று விட்டான். 

        

அன்று அமாவாசையாதலால் சுற்றிலும் பயங்கர இருளாக இருக்குமே என்ற கவலையும், சந்தேகமும் அவனது மனத்தில் எழுந்தன. 

          

அவன் கையில் விளக்கு ஒன்று  வைத்திருந்தான் என்பதில் சந்தேகம்  இல்லை.  

         

ஆனால் அந்த விளக்கின் ஒளி பத்து அடிகள் எடுத்து வைக்கும் தூரம்தான்  தெரியும்.  
ஆனால் அவன் ஏற வேண்டியதோ பத்து மைல் தூரம். அவன் எப்படிச் செல்ல முடியும்….??? 

         

அந்த அடர்ந்த காரிருளில் சிறிய  மெழுகுவர்த்தியின் ஒளியில் புறப்பட்டுச் செல்வது புத்திசாலித்தனம் ஆகுமா….??? 

இது கடலில்  ஒரு சிறிய படகில் செல்வதைப் போன்றதாகும். 

         

இவ்வாறு  எண்ணிக் கொண்டு  அவன் கிராமத்தின் வெளியே சூரிய உதயத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். 

        

ஆனால்  அதே நேரத்தில்  மற்றொரு வயதான மனிதன்  தன்னைக் கடந்து மலையை நோக்கிச் செல்வதைப் பார்த்தான். 

        

அந்த  மனிதன்  இவனிடமிருந்த விளக்கைவிட மிகச் சிறிய விளக்கையே வைத்திருந்தான். 

        

அந்த  வயதான  மனிதனை நிறுத்தி அவனிடம் தனது சந்தேகத்தைக் கூறியதும் அந்த வயதான  மனிதன் சிரித்தான்.   

       

“பைத்தியக்காரா….!!! ஆரம்பத்தில்  நீ பத்தடிகள் எடுத்துவை. நீ பார்க்க முடிந்த தூரம் வரை செல். 

பின் அதே அளவு தூரம்  உன் முன் இருப்பதை உணர்வாய். 

உன் முன்னால்  ஒரு அடி தூரத்தைக் காண முடிந்தால் நீ அதன் உதவியால் இந்த  உலகம் முழுவதையும்  சுற்றி வரலாம்…..!!!” என்று  அந்த  வயதான  மனிதன் கூறினான். 

          

அந்த  இளைஞன்  இதைப் புரிந்து  கொண்டு  எழுந்து நடந்தான். சூரியன்  உதயமாவதற்குள் மலையைச் சென்றடைந்தான். 

       

ஓஷோ  கூறுகிறார் :

     “நானும் அதைத்தான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.  நண்பர்களே…!!! 
நீங்கள்  ஏன்  முடங்கிக் கொண்டு  உட்கார்ந்திருக்கிறீர்கள்….??? 


எழுந்திருங்கள்;  நடந்து செல்லுங்கள்.  நினைப்பவனல்ல, நடப்பவன்தான் சென்றடைய முடியும்.  

உன்னிடம் பத்து அடிகள்  எடுத்து  வைக்கும்  தூரத்திற்கு வேண்டிய  ஒளி இருந்தால் போதும்  என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். 

அதுவே  போதுமானது, கடவுளை அடைய அதுவே  போதுமானது.”
<3

Leave a Reply