பக்தன்

நாரதரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்போதும் “நாராயணா, நாராயணா” என்று அந்த பரமாத்மாவின் பெயரையே இடைவிடாது உச்சரித்துகொண்டிருப்பவர்.

ஒரு நாளைக்கு அவர் எத்துனை தடவை “நாராயணா” என்ற பெயரை சொல்கிறார் என்று அவருக்கே தெரியாது. மூச்சு விடுவது போல அந்த நாராயணனின் நாமாவை அனுதினமும் ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொண்டிருப்பார். இதனால் அவருக்கு கர்வம் ஏற்பட்டுவிட்டது.

நாம தான் இந்த உலகத்துலயே மிகப் பெரிய விஷ்ணு பக்தன். நமக்கு மிஞ்சி யாருமே கிடையாது” என்கிற ஆணவம் தலைக்கேறிவிட்டது.

வருவோர் போவோரிடமெல்லாம் “நான் தான் மிகப் பெரிய விஷ்ணு பக்தன், அவரது பேரன்புக்கு பாத்திரமானவர்களில் நான் தான் முதல்வன். மற்றவர்கள் யாரும் ஒரு பொருட்டேயல்ல” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவரின் ஆணவத்தை அகற்றி மெய்யறிவு புகட்டிட பகவான் ஸ்ரீமன் நாராயணன் திருவுள்ளம் கொண்டார்.

வழக்கம் போல ஒரு நாள் வைகுண்டத்துக்கு போனார் நாரதர்.

“நாராயண… நாராயண”

ஆனால் நாரதர் வந்ததை கவனிக்காமல் பகவான் ஏதோ சிந்தனையிலிருந்தார்.

“என்ன பகவானே நான் வந்ததை கூட கவனிக்காமல் அப்படியென்ன சிந்தனையிலிருக்கிறீர்கள்?” என்று கேட்க, அதற்கு பதிலளித்த ஸ்ரீமன் நாராயணன், “என் சிறந்த பக்தன் ஒருவனை பற்றி சிந்தித்துகொண்டிருந்தேன். அவனது வாழ்க்கையை எப்படி உயர்த்துவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

நாரதருக்கு ஒரு மெல்லிய அதிர்ச்சி. “பிரபோ, நான் தானே இந்த பிரபஞ்சத்திலேயே சிறந்த விஷ்ணு பக்தன். அப்போது என்னை பற்றித் தானே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?”

“இல்லை… நாரதா… இந்த பிரபஞ்சத்திலேயே என்னோட சிறந்த பக்தன் ஒருத்தன் பூலோகத்திலிருக்கிறான். அவனை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்”

“நான் தானே சிறந்த விஷ்ணு பக்தன். உங்கள் பெயரை எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பவன். அப்படியிருக்க யாரோ இருக்கும் ஒருவனை சிறந்த விஷ்ணு பக்தன்னு சுவாமி சொல்கிகிறாரே… இது என்ன அபத்தம்” என்று நினைத்து பகவானிடம்… “சுவாமி… அனுதினமும் மூச்சு விடுவதைப் போல உங்கள் பெயரை சொல்லிக்கொண்டிருக்கிறேன் நான். அப்படியிருக்க, நான் தானே சிறந்த விஷ்ணு பக்தனாக இருக்க முடியும்? நீங்கள் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?” என்று கேட்டார்.

பகவான் சிரித்துக்கொண்டே, “நாரதா…. உனக்கு சொன்னால் புரியாது. வா நேரிலேயே உனக்கு காட்டுகிறேன்” ன்னு சொல்லி பூலோகத்துக்கு நாரதரை அழைத்துக்கொண்டு வந்தார்.

ரெண்டு பேரும் ஒரு கிராமத்துக்கு வர்றாங்க…. அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு குடிசை. அந்த குடிசையை காண்பித்து, “என்னோட சிறந்த பக்தன் இங்கு தானிருக்கிறான்” என்று பகவான் கூற நாரதருக்கு வியப்பும் ஏமாற்றமும் மேலிடுகிறது.

சிறந்த பக்தனை காட்டுகிறேன் என்று ஏதாவது கோவிலுக்கு கூட்டி வருவார் என்று பார்த்தால், இவர் என்னடாவென்றால், ஒரு குடிசையை காட்டுகிறாரே?

அவர் அப்படி நினைப்பது அந்த கருணாமூர்த்திக்கு தெரியாதா என்ன? பகவான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்.

“நாரதா நாம் சற்று மறைந்திருந்து அங்கு நடப்பதை கவனிக்கலாம்”

இருவரும் சற்று தொலைவில் இருக்கும் மரத்தின் பின்னேயிருந்து நடப்பதை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடிசைவாசி விடியற்காலை எழுந்தான். “ஸ்ரீ ஹரி நாராயணா… இன்னைக்கு பொழுது நல்லபடியா போகணும்பா. என்னை காப்பாற்று” அப்படின்னு வேண்டிக்கொண்டு, தனது காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு அரை வயிற்று கூழை குடிக்கிறான்.

அவன் மனைவி, “நாளை உணவுக்கு வீட்டில் அரசியில்லை. என்ன செய்வது?” என்கிறாள். “நாளை கதை நாளைக்கு. நாராயணன் இன்னைக்கு நமக்கு படியளந்திருக்கிறான் அல்லவா? அது போதும்” அப்படின்னு சொல்லிட்டு மதிய உணவை ஒரு தூக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு வயலுக்கு புறப்படுகிறான்.

போகும்வழியில் ஒரு ஓடையில் நீராடிவிட்டு இருக்கும் ஒரே ஒரு கந்தையை கசக்கி பிழிந்து காயவைத்து அதையே மறுபடியும் கட்டிக்கொள்கிறான்.

தொடர்ந்து செல்லும்போது ஒரு உடல் ஊனமுற்ற பிச்சைக்காரன் எதிர்படுகிறான்… “ஐயா.. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சுங்கய்யா… ஏதாவது தர்மம் பண்ணுங்க சாமி”

தான் மதியம் சாப்பிட வைத்திருந்த மதிய உணவில் பாதியை அவனுக்கு கொடுத்துவிடுகிறான்.

பின்னர் வயலுக்கு சென்று கொளுத்தும் வெயிலில் பகல் முழுதும், வயலில் ஏறு பூட்டி உழுகிறான். மதியம் அதே போல, காலை பிச்சைக்காரனுக்கு கொடுத்தது போக மீதி தூக்கு சட்டியிலிருக்கும் கொஞ்சம் உணவை சாப்பிடுகிறான். வாய்க்காலில் இறங்கி தண்ணீர் குடிக்கிறான்.

திரும்பவும் வயலில் இறங்கி உழுகிறான். கதிரவன் சாய்ந்தவுடன், வீடு திரும்புகிறான்.

கை, கால்களை அலம்பிக்கொண்டு, தனது குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடுகிறான். மனைவியுடன் பேசுகிறான். இப்படியே இரவாகிவிடுகிறது. வீட்டில் எஞ்சியிருப்பவற்றை சமைத்து தருகிறாள் மனைவி. அதை சாப்பிட்டுவிட்டு வெளியே உள்ள கயிற்று கட்டிலில் உறங்கச் செல்கிறான்.

கட்டிலில் படுக்கும்முன், “ஸ்ரீ ஹரி நாராயணா… இன்னைக்கு நல்லபடியா போச்சு. உனக்கு என் நன்றி!” அப்படின்னு சொல்லிட்டு தூங்குகிறான்.

இவற்றை பார்த்த நாரதருக்கு சிரிப்பு வருகிறது.

“என்ன சுவாமி… பிரபஞ்சத்திலேயே சிறந்த பக்தன் என்று இவனையா சொல்கிறீர்கள்? ஒரு நாள் முழுதும் இவன் தங்கள் பெயரை மொத்தம் இரண்டே முறை தான் சொல்கிறான். பூஜை செய்யவில்லை. கோவிலுக்கு போகவில்லை…”

பகவான் சிரித்துக்கொண்டே, “சரி… இப்போது உனக்கு ஒரு பந்தயம். அதுல நீ ஜெயித்தால் நீ தான் சிறந்த பக்தன் என்பதை ஒப்புக்கொள்வேன்” என்கிறார்.

நாரதரும் ஒப்புக்கொள்கிறார். பகவான் உடனே ஒரு எண்ணெய் நிரம்பிய சிறு கிண்ணத்தை நாரதரிடம் கொடுத்து, “அதோ அங்கு சிறிய மலை ஒன்று தெரிகிறதல்லவா ? இந்த எண்ணெய் கிண்ணத்தை கையில் வைத்துகொண்டு அந்த மலையை மூன்று நாழிகைக்குள் மூன்று முறை சுற்றி வா. அது போதும்!” என்கிறார் லோக நாயகன்.

நாரதர் சிரித்துக்கொண்டே, “இவ்ளோ தானா? நானும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன். நாராயண… நாராயண…” என்று சொல்லியபடி பந்தயத்துக்கு தயாரானார் நாரதர்.

“நாரதா நில்… ஒரே ஒரு நிபந்தனை”

“சொல்லுங்கள் ப்ரபோ….”

“நீ சுற்றி வரும்போது, இந்த கிண்ணத்திலிருந்து ஒரு துளி எண்ணெய் கூட வெளியே சிந்தக்கூடாது எச்சரிக்கை!!!”

“இது தானா? ஏதோ பெரிய நிபந்தனை விதிக்கப்போகிறீர்கள் என்று நினைத்தேன். சரி… சரி….வருகிறேன். வெற்றியோடு திரும்புகிறேன்”

கிரிவலத்துக்கு புறப்பட்டார் நம் நாரதர்.

அந்த கிண்ணத்தை சர்வ ஜாக்கிரதையுடன் கைகளில் ஏந்தி எண்ணெய் கீழே சிந்தாதவாறு பத்திரமாக அந்த மலையை வேகமாக சுற்ற ஆரம்பிக்கிறார் நாரதர். மூன்று நாழிகைக்குள் மூன்று சுற்று சுற்றிவிடுகிறார் நாரதர்.

“வெற்றி… வெற்றி….” என்று கூக்குரலிட்டவாறே பகவானிடம் வந்து பெருமை பொங்க தனது கைகளை காண்பிக்கிறார். “பார்த்தீர்களா பிரபோ. ஒரு துளி கூட சிந்தவில்லை. அதே நேரத்தில் மூன்று நாழிகையில் மூன்று சுற்று சுற்றி நீங்கள் வைத்த பந்தயத்தில் ஜெயித்தும் விட்டேன்!!!!!!!”

“ஓ…. அப்படியா? சரி… மூன்று முறை சுற்றினாயே… அப்போது எத்துனை முறை என் பெயரை உச்சரித்தாய்?”

அப்போது தான் நாரதருக்கு உறைத்தது தான் நாராயணனை மறந்த விஷயம்.

“அது வந்து அது வந்து ப்ரபோ ஒரு முறை கூட இல்லையே…”

“ஏன்?”

“ஏன்னா… சுற்றும்போது எண்ணெய் கீழே சிந்திவிடக்கூடாது என்கிற நிபந்தனையை நீங்க வைத்ததால் என் கவனமெல்லாம் இந்த எண்ணெய் கிண்ணம் மேல் அல்லவா இருந்தது. எனவே உங்கள் பெயரை உச்சரிக்க மறந்துவிட்டேன் பிரபோ….”

ஒரு சாதாரண எண்ணெய் கிண்ணத்தை சில நாழிகைகள் சுமந்ததற்கே நீ என்னை மறந்துவிட்டாய். ஆனால், அந்த ஏழை விவசாயி, அத்தனை கஷ்டத்திலும் இல்லறம் என்ற மிகப் பெரிய பாரத்தை சுமந்துகொண்டு என் பெயரை இரு தடவை உள்ளன்போடு உச்சரிக்கிறான். அவன் பெரிய பக்தனா? நீ பெரிய பக்தனா?” என்று பரந்தாமன் கேட்க, நாரதர் உடனே, பகவானின் கால்களிலே விழுந்துவிடுகிறார்.

பிரபோ என்னை மன்னியுங்கள். என் ஆணவம் அகன்றது. அனுதினமும் உங்கள் பெயரை சொல்வதால் நான் தான் சிறந்த பக்தன் என்று நினைத்துவிட்டேன். ஆனால், குடும்பம் என்ற பாரத்தை சுமந்துகொண்டு மிகுந்த கஷ்டத்துக்கிடையேயும் உங்கள் பெயரை இரு முறை சொல்லும் இவன் தான் மிகச் சிறந்த பக்தன் என்பதில் சந்தேகமில்லை. என் அகந்தை அழிந்தது சுவாமி…” என்று கால்களில் வீழ்ந்தார்

பகவான் உடனே அவரை தூக்கி, “நாரதா…. இந்த கலியுகத்தில், ஒருவன் கோவிலுக்கு செல்வதாலோ, பூஜை புனஸ்காரங்களை தவறாமல் செய்வதாலோ என் பக்தனாகிவிட முடியாது. அடுத்தவருக்கு சிறிதும் தீங்கினை எண்ணாது, தங்கள் கடைமையை கண்ணாக கொண்டு, அதில் உழைப்பவர்களும், ஓரிரு முறை எம்மை நினைத்தாலும் உள்ளன்போடு எவர் நினைக்கிறார்களோ அவர்கள் தான் என் பக்தர்கள். என் அருளுக்கு பாத்திரமானவர்கள்!!!” என்று கூறிவிட்டு மறைகிறார்.

உண்மையான பக்தனுக்கு இலக்கணம் இது தான். அந்த ஏழை விவசாயி மாதிரி தான். குடும்ப பாரத்தை சுமந்துகிட்டு, வாழ்க்கையோட ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடும் சராசரி மனிதன் அவன். அவனுக்கு இறைவனிடம் எந்த எதிர்பார்ப்புமில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் தன் கடமையும் முடியும்போது பிறருக்கு உதவும் நல்ல உள்ளமும் தான். எனவே பரோபகார சிந்தையோடு தங்கள் கடமையை சரியாக செய்துகொண்டு பக்தி செலுத்தும் இந்த விவசாயிப் போன்றவர்களே உண்மையான கடவுள் பக்தர்கள்.

Leave a Reply