தானம்

ரண்டு நண்பர்கள் ஒரு ஊரில் வியாபாரம் செய்து வந்தார்கள். ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரம் சரியில்லாமல் போக தொழிலில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம், சுபகாரியத் தடை, வீட்டில் அமைதியின்மை இதெல்லாம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஜோதிடரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்று உரிய பரிகாரம் செய்யலாம் என்று கருதி அவரை சந்திக்க புறப்பட்டனர்.

இருவரது ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்த ஜோதிடர்…. “உங்களுக்கு பிதுர்தோஷம் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு பிரச்னையும். இன்னும் சில நாட்களில் மகாளய அமாவாசை வருகிறது. அன்று நீங்கள் முறைப்படி சிரார்த்தம் செய்து ஏழை எளியோருக்கு தாராளமாக மிளகு தானம் செய்யவேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பித்ரு சாபம் / தோஷம் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும்” என்றார்.

அப்பாடா தங்கள் பிரச்சனைக்கு ஒரு வழியில் தீர்வு கிடைத்ததே என்று எண்ணிய இருவரும் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்.

மகாளய பட்சம் இரண்டொரு நாட்களில் வருவதால் தங்கள் ஊரில் தீர்த்தப் படித்துறைக்கு வரும் அனைவருக்கும் மிளகு தானம் செய்யலாம் என்று இருவரும் ஆளுக்கொரு இரண்டு படி மிளகை வாங்கி வைத்துவிட்டனர்.

மறுநாள் அந்த ஊரில் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்தது. திருமண வீட்டார் எவ்வளவோ அலைந்தும் அந்த சிறிய ஊரில் திருமணத்துக்கு சமைக்க சமையலில் முக்கியப் பொருளான மிளகு எங்கும் கிடைக்கவில்லை. இருந்த மிளகு முழுவதையும் இந்த இரு வியாபாரிகள் வாங்கிச் சென்றுவிட்டனர் என்று தெரிந்தது.

(அக்காலங்களில் சமையலில் காரம் சேர்க்க மிளகு தான் பயன்படுத்துவார்கள். வெள்ளைக்காரர்கள் வந்தபின்னர் தான் மிளகாய் பயன்பாடு வந்தது!)

பெண்ணின் தந்தையான அந்த கூலித்தொழிலாளி இவர்களைத் தேடி வந்து “சாமி… என் பொண்ணுக்கு கண்ணாலம் வெச்சிருக்கேன். சமையலுக்கு மிளகு கிடைக்கலே. விசாரிச்சதுலே சந்தையில் இருக்குற எல்லா மிளகையும் நீங்க தானம் கொடுக்க வாங்கிவந்துட்டீங்கன்னு சொன்னாங்க. ரெண்டு படி மிளகு தர்மம் பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும் சாமி” என்று விண்ணப்பித்துக்கொண்டான்.

முதலாமவன் சிந்தித்தான். ஜோதிடர் மகாளய அமாவாசை அன்று தானே தானம் செய்யவேண்டும் என்று சொன்னார்… நாம் இப்போது இதை இவனுக்கு கொடுத்துவிட்டால் என்ன செய்வது? அவன் அமாவாசையன்று தானம் செய்து நம்மைவிட மேலே போய்விடுவானே என்று கருதி, “நான் அதை வேறு ஒரு உபயோகத்திற்காக வாங்கி வெச்சிருக்கேன். அதை தர முடியாது. நீ வேற எங்கேயாவது முயற்சி பண்ணு” என்று கூறி அனுப்பிவிட்டான்.

மிகவும் ஏமாற்றத்திற்குள்ளான அந்த ஏழை மற்றொரு வணிகனிடம் சென்று நிலைமையை விளக்கி தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான்.

இவன் சிந்தித்தான். “இந்த ஏழையின் வீட்டுக்கு நாம் வைத்த மிளகு பயன்படுமென்றால் அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்” என்று கருதி தன்னிடம் இருந்த இரண்டு படி மிளகையும் எடுத்து வந்து, அதில் ஒரே ஒரு கைப்பிடி மட்டும் எடுத்துக்கொண்டு அவனிடம் கொடுத்துவிட்டான்.

ஐயா… உங்களுக்கு என்னிடம் இருந்த மிளகை கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சி. மகாளய பட்சத்தன்று சாஸ்திரப்படி தானம் செய்வதற்கு ஒரு கைப்பிடி மிளகை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை உங்களுக்கு தந்திருக்கிறேன்” என்றான்.

ரொம்ப நன்றி தம்பி. நீங்க நல்லாயிருக்கணும்” என்று வாழ்த்திவிட்டு சென்றான் அந்த ஏழை.

அடுத்த சில நாட்களில் மகாளய பட்சம் வந்தது.

இருவரும் தர்ப்பணாதி கர்மாக்களை குறைவரச் செய்தனர்.

முதலாமவன் வருவோர் போவோர்க்கெல்லாம் “இந்தாங்க மிளகு வாங்கிக்கோங்க” என்று கூறி கூறி தானம் கொடுத்தான்.

ஹப்பா… ஜோதிடர் சொன்னது போல இந்த விஷேஷ நாளில் தானம் செய்துவிட்டேன். நல்லவேளை அன்று கொடுத்திருந்தால் இன்று தானம் செய்ய வாய்ப்பில்லாமல் போயிருக்கும்” என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

இரண்டாமாவன் தன்னிடமிருந்த ஒரே ஒரு கைப்பிடி மிளகை மட்டும் தானம் செய்துவிட்டு போய்விட்டான்.

சில மாதங்கள் கழிந்தன.

முதலாமவன் வியாபாரம் முன்னைக்காட்டிலும் நொடிந்து போனது. அவன் சரக்கு ஏற்றி அனுப்பிய கப்பல் புயலில் சிக்கி மூழ்கியது. இவனையும் கொடுநோய் வாட்டி வதைத்தது. மனைவி இவனிடம் கோபித்துக்கொண்டு சண்டையிட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டாள். இப்படி அடுத்தடுத்த சோதனைகளால் நிலைகுலைந்தான்.

இரண்டாமவனின் வியாபாரம் நன்கு அபிவிருத்தியாகி லாபம் கொழித்தது. வீடு தோட்டம் துரவு முதலியவற்றை வாங்கினான். திருமணமாகியும் நீண்டநாட்கள் வாரிசின்றி தவித்த அவன் மகளுக்கு குழந்தை பிறந்தது. ஆலய திருப்பணிகள் பலவற்றை செய்தான். அவன் செல்லுமிடமெங்கும் அவனுக்கு மாலை மரியாதை கௌரவம் முதலியன கிடைத்தது.

முதலாமவன் முன்பு ஆலோசனை கேட்ட ஜோதிடரை மீண்டும் சந்தித்து “நீங்கள் சொன்னதை சிரமேற்கொண்டு அவனை விட நான் தான் செய்தேன். அப்படியிருக்க அவன் நிம்மதியாக சந்தோஷமாக எந்தக் குறையுமின்றி செல்வச் செழிப்புடன் இருக்கின்றன. எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று கேட்டான்.

நடந்த அனைத்தையும் கேட்டறிந்த ஜோதிடர் “தகுதியுடையோர்க்கு சரியான நேரத்தில் கொடுப்பதே தானம். நீயோ அந்த ஏழையின் அவசரத்துக்கு உதவ மனமில்லாமல் நாள் கிழமை பார்த்து செய்தாய்.”

“ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை” (பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?) என்ற குறள் கூறும் கருத்துப்படி, உன்னிடம் மிளகை பலர் வாங்கிக்கொண்டாலும் அதனால் உடனடி பயன் யாருக்கும் இல்லை. வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டார்கள் அவ்வளவே. எனவே உன் தானம் விழலுக்கிறைத்த நீராய் போனது.

ஆனால், உன் நண்பனோ ‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’ என்ற வாக்கின்படி ஒரு ஏழைக்கு அவசரத் தேவைக்கு உதவினான். அதனால் பத்து மடங்கு பலன் அவனுக்கு கிடைத்துவிட்டது. உனக்கோ ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவ மறுத்த தோஷம் ஏற்பட்டதோடு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற உன் சுயநலம் காரணமாக புண்ணிய நாளில் கொடுத்த தானமும் வீணாய்ப் போனது” என்றார்.

“என் தவறை உணர்ந்துவிட்டேன் ஐயா.. இனி தகுதியுடையோர்க்கு தேவைப்படும் போது  தவறாமல் தானம் செய்து வாழ்வேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

பண்டிகை முதலான நாள்கிழமைகளில் தானம் செய்யவேண்டும் என்று ஏன் சொன்னார்கள் என்றால் பண்டிகையின் போது ஏழைகளுக்கு பலவித தேவைகள் இருக்கும். அவை அன்று கிடைக்கும் தானம் மூலம் பூர்த்தியாகும் என்பதால் தான். மேலும் தான தர்மம் குறித்த ஆர்வத்தை ஒருவருக்கு உண்டு பண்ணவே அவ்விதம் சொல்லப்பட்டிருக்கிறது. பண்டிகை மற்றும் விஷேஷ நாட்களின்போது பலர் தானம் செய்வதை பார்த்து ஒருவனுக்கு அந்த எண்ணம் ஏற்படும். பின்னர் அது ஒரு வழக்கமாகிவிடும்.

கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு தானமளித்து அதன் மூலம் கிடைக்கும் மனநிறைவை ஒருவரை உணரச் செய்வதே சாஸ்திரங்களின் நோக்கம். அப்படி தான தர்மங்கள் செய்து அதன் ருசி (அதாவது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி மனநிறைவு) ஒருவருக்கு தெரிந்துவிட்டால் போதும் மனிதன் அடிக்கடி அதை செய்யத் துவங்குவான். எனவே தான் பண்டிகை, நாள் கிழமை விஷேஷங்களில் தானம் செய்யுங்கள் என்று நமது சாஸ்திரங்கள் கூறின. மற்றபடி அன்று மட்டும் தான் தானம் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல.

பிரச்சனைகளோ துன்பமோ ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். எனவே நாள் கிழமை பார்க்காமல் தேவைக்கு தருவதே தானம், அவசரத்திற்கு மறுக்காமல் செய்வதே தர்மம் என்பதை உணர்ந்து அறவாழ்வு வாழவேண்டும்.

Leave a Reply