எதிர்மறை

​கெய்ரோவில் ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் இரவு கடையை மூடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி போகும்போது போகிற வழியில் இருந்த உயரமான கட்டிடம் ஒன்றை நிமிர்ந்து பார்ப்பான். கட்டிட உச்சியில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி உடைந்து விழுந்துவிடப்போகிறது என்கிற பயம் அவனுக்கிருந்தது. ஆகவே, பயத்துடன்தான் எப்போது அதைக் கடந்து போவான்.
உறுதியான இடிதாங்கி என்பதால் அது அசைவற்றிருந்தது. ஒருநாள் நிச்சயம் அது இடிந்துவிழுந்துவிடும் என்றே அந்த வணிகன் நம்பினான். ஒரு மழைக்கால இரவில் அவன் வீடு திரும்பும்போதும் அந்த இடிதாங்கியை ஏறிட்டுப் பார்த்தான். அவன் நினைத்ததைப் போலவே அந்த இடிதாங்கி உடைந்து, நேராக அவன் மீதே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அலறி வீழ்ந்தவனை ஓடிவந்து சில ஆட்கள் தூக்கினார்கள். ‘இடிதாங்கி விழுந்துவிடும் என்பதை நான் முன்பே அறிந்திருந்தேன். நான் நினைத்தபடியே அது நடந்துவிட்டது…’ எனப் புலம்பினான்.

அப்போது அவனை தூக்க வந்தவர்களில் ஒரு வயதானவர் சொன்னார்: ‘‘அப்படியில்லை. அந்த இடிதாங்கி உன்மீது விழுந்துவிடும்… விழுந்துவிடும் என நீ நினைத்துக் கொண்டேயிருந்தாய். அதனால்தான் உன் மீது அது விழுந்துவிட்டது. எதிர்மறையானவற்றை நினைத்துக் கொண்டேயிருந்தால் நிச்சயம் அது நடந்தேறிவிடும்!’’

பெரியவர் சொன்னதை விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்ய இயலாதுதான். ஆனால், உளவியல் நம்பிக்கையின்படி எதிர்மறை எண்ணங்கள் ஒருவனை ஆழமாக பாதிக்கவே செய்கிறது. ஆகவே, ‘ஏதோவொன்று நடந்துவிடும்… நடந்துவிடும்’ என வீண் கற்பனை செய்து கொண்டேயிருக்க வேண்டாம்.

Leave a Reply