இறைவன் அப்படி

வர் ஒரு மிகச் சிறந்த ஓவியர். கண்கள் காணும் இயற்கை காட்சிகளை அப்படியே தத்ரூபமாக படம் வரைவதில் வல்லவர். ஒரு நாள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசம் ஒன்றில் தனது தத்ரூபமான படைப்பை அவர் தன் மாணவர்கள் முன்னிலையில் வரைய ஆரம்பித்தார்.

அவர் வரைவதை ஆர்வமுடனும் வியப்புடனும் மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் ஆசிரியரின் திறமையை எண்ணி வியந்தனர்.

வரைந்து முடித்த பின்னர், “நாம வரைஞ்சவுடனே கொஞ்சம் தூரத்துல நின்னு நாம வரைஞ்சதை பார்க்கணும். அப்படி பார்த்தா ஏதாவது குறை இருந்தா தெரியும். டச் பண்ணனுன்ம்னா பண்ணிக்கலாம்!” என்று கூறியபடி அப்படியே பின்னால் நகர்ந்தார். அப்படியே பின்னால் நகர்ந்துகொண்டே சென்றவரை திரும்பி பார்த்த ஒரு மாணவன்… திடுக்கிட்டான்.

காரணம் பின்னால் நகர்ந்தபடி சென்ற  ஆசிரியர் அந்த மலையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தார். இன்னும் ஒரு இன்ச் அவர் நகர்ந்தால் கூட கீழே பல நூறு அடி ஆழம் கொண்ட பள்ளத் தாக்கில் விழவேண்டியிருக்கும். விழுந்தால் நிச்சயம் மரணம் தான்.

“சார்… பின்னாலே நகராதீங்க… ஆபத்து!!!” என்று கூக்குரல் இட்டு, சத்தம் போட்டு அவரை எச்சரிக்கலாம் என்றால் அதிர்ச்சியில் அவர் பின்னால் திரும்பி கீழே பார்த்தாலோ அல்லது நகர்ந்தாலோ விழுந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

ஆபத்திலிருக்கும் தன் ஆசிரியரை உடனே காப்பாற்றவேண்டிய நிர்பந்தம் மாணவனுக்கு ஏற்பட்டது. சமயோசிதமாக சிந்தித்த அந்த மாணவன், தன் ஆசிரியர் ஓவியம் வரைய பயன்படுத்திய அந்த வண்ணங்கள் கொண்ட தட்டை எடுத்து சட்டென்று யாரும் எதிர் பாராத வண்ணம் ஓவியத்தின் மீது வீசினான்.

ஓவியத்தில் இவன் வீசிய மை தெரிக்கவே, ஓவியம் முழுதும் பாழாய் போனது.

பல மணிநேரம் பாடுபட்டு தான் வரைந்த ஓவியம் பாழாய்ப் போனதை பார்த்த ஆசிரியர் திடுக்கிட்டார். “டேய்… என்ன காரியம் செஞ்சே…??” என்று கூறியபடி அந்த மாணவனை  முன்னோக்கி பாய்ந்தவர் அவனை நையப்புடைக்கிறார். சக மாணவர்களும் அவன் செயலை கடுமையாக கண்டித்தனர்.

இவனுக்கு ஓவியத்தை பார்த்து பொறாமை… அதான் இப்படி பண்ணிட்டான்…. படுபாவி…” என்று ஆளாளுக்கு அவனை பதம்பார்த்தனர்.

மாணவன் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டான். சற்று நேரம் கழித்து தனது ஆசிரியரை நோக்கி… “மாஸ்டர்…. அங்கே பாருங்க… நீங்க நின்னுக்கிட்டுருந்த இடத்தை… ஒரு இன்ச் நீங்க பின்னாடி நகர்ந்திருந்தா கூட உங்க உயிருக்கே ஆபத்தா அது முடிஞ்சிருக்கும். உங்களை காப்பாற்ற வேற வழி தெரியலே.. அதான் இப்படி செஞ்சேன்…” என்று மாணவன் கூற ஆசிரியர் அப்போது தான் தான் நின்றுகொண்டிருந்த இடத்தை பார்க்கிறார்.

அவருக்கு திடுக்கிடுகிறது. மாணவன் சொல்வது போல, ஒரு துளி மேலும் நகர்ந்திருந்தால் கூட தன் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்கிறார்.

சமயோசிதமாக செயல்பட்டு தனது உயிரை காக்கவே மாணவன் அப்படி நடந்துகொண்டான் என்பதை புரிந்துகொள்ளும் ஆசிரியர், “ப்ளீஸ் ஃபர்கிவ் மீ மை டியர் பாய்… YOU SAVED MY LIFE” என்று அவனை கட்டி அணைத்துக்கொள்கிறார். சக மாணவர்களும் அவனை தவறாக புரிந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அவனது சமயோசித அறிவை பாராட்டுகின்றனர்.

======================================================

மேலே சொன்ன கதை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடப்பது தான். என் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது. அல்லும் பகலும் தூக்கம் தொலைத்து உருவாக்கிய என்னுடைய பல ஆண்டுகால உழைப்பு ஒன்றை இறுதியில் இறைவன் பயனற்று போகுமாறு செய்துவிட்டான். இறைவன் மீது கடும் கோபம் கொண்டு இந்த ஆசிரியர் போலவே அவனை கடிந்துகொண்டேன். தூற்றினேன். “என் உழைப்பை இப்படி குப்பையில் வீசிவிட்டாயே இறைவா?” என்று கண்ணீர் வடித்தேன். ஆனால் பின்னர் தான் புரிந்துகொண்டேன்… ஒரு மிகப் பெரிய சரிவில் விழ இருந்த என்னை காப்பாற்ற வேண்டியே இறைவன் அப்படி செய்தான் என்று.

நல்லோர் உள்ளம் குளிர, பெற்றோர் கண்டு மகிழ நான் ஒரு புதிய வரலாறு நான் படைக்கவேண்டும்…. இந்த வையம் சிறக்க என் வாழ்வும் எழுத்தும் பயன்படவேண்டும் என்றே இறைவன் அப்படி செய்தான் என்று இப்போது புரிகிறது.

One comment

  1. உங்கள் இழப்பு கண்டிப்பாக காதலாகதான் இருக்கும் என நினைக்கிறேன்

Leave a Reply to Anonymous Cancel reply