பத்து சவரன்

நானும் என் மனைவியும் திருமண மண்டபத்துள் நுழைந்தோம். கூட்டம் அளவோடுதானிருந்தது, ஒரு எளிய ஆசிரியர் வீட்டுத் திருமணமென்றால் எப்படி இருக்கும்!
எனது பள்ளிக்கூட ஆசிரியர், அவரிடம்தான் நான் தமிழை சரியாகவே கற்றுக் கொண்டேன்.

சங்கத் தமிழ் மூன்றைப் போல் பெண்களாகவே மூன்று அவருக்கு. இரண்டு பெண்களை கரை சேர்த்தவர், மூன்றாவதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

பத்து சவரன் கேட்டாங்கப்பா, ஏதோ ஒப்பேற்றி கல்யாணமும் செய்யறேன்.
உறவினர்கள் பலரோடு பழைய மாணவர்கள் என்று ஒரு சிலரே வந்திருந்தனர்.
சம்பந்தி போலிருக்கிறது. பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் போய் நின்றதை கவனிக்கவில்லை.

சம்பந்தி! எட்டு சவரன் போட்டிருக்கேன். என் பெரிய பெண் இரண்டு சவரன் தருகிறேன் என்றாள். கொஞ்சம் பணக்கஷ்டம். அடுத்த மாதம் கட்டாயம் தந்து விடுவதாகக் கூறியிருக்கிறாள்.
என்னங்க இப்படி சொல்றீங்க? இப்போது சொன்னால் எப்படியாவது திருமணம் நடந்துவிடும் என்று எண்ணமா?

அய்யோ! அப்படியெல்லாம் எதுவுமில்லை.
அப்போது, ஆசிரியரின் கையில் ஒரு நெக்லஸை கழற்றி வைத்தாள் என் மனைவி அவர் திடுக்கிட்டார்!
என்னப்பா இது?

அவரைக் கேட்காதீங்க! என்னைக் கேளுங்க! என் கணவரோட ஆசிரியர் கஷ்டப்படுகிறார் என்றால் அது அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் அவமானம்தான்! உங்கள் பெரிய பெண்ணாக எண்ணிக் கொள்ளுங்கள்!

ஆசிரியர் திகைப்போடு என்னைப் பார்த்தார், நான் சிரித்தேன்.
பிள்ளையின் அப்பா அதை வாங்கி என் மனைவியிடமே நீட்டினார்.
நீங்களே போட்டுக்குங்க! எல்லாரும் என்னை மன்னிக்கணும்! நல்ல மாணவர்களை உருவாக்கியவரின் பெண்ணை நாங்கள் மருமகளாக அடைவதில் சந்தோஷம்! ஐயா! இதுவே போதும்!

– லோகநாதன்

-dinamalar

Leave a Reply