தாத்தா வீடு -சிறுகதை.

என் தாத்தா பாட்டியை பார்க்க வரும் போதெல்லாம் ரெண்டு வீடு தள்ளி இருக்கும் அந்த வீட்டினைப் பார்ப்பேன். ஆப்பிள் பழத்தை பாதியாய் வெட்டியது போல பாதியாய் இடிந்து கிடக்கும் அந்த வீடு. எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அந்த வீட்டின் முழு அமைப்பும் தெரியும்.
திண்ணை உள்ள முகப்பு, நடை பாதை, முற்றம் கூடிய பெரிய வராண்டா, பக்கவாட்டில் அறைகள், வராண்டா தொடர்ந்து பெரிய சமையலறையும், அதை ஒட்டி பின்பக்கம் செல்ல நடை பாதையும் இருந்தது.

ஒரு காலத்தில் அந்த சமையலறையில் உலையும் குழம்பும் கொதித்துக் கொண்டிருந்திருக்கும். முற்றத்தில் முதியவர் ஒருவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்திருந்திருக்கலாம். குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியாடியிருந்திருக்கலாம். அவர்கள் எல்லாம் இப்போ எங்கே இருப்பார்கள்? ஏன் இந்த வீட்டை விட்டுச் சென்றார்கள்? இந்த வீடு நிறைய மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும், ஏக்கங்களையும், வெறுப்புகளையும் பாத்திருக்க கூடும்… யார் அறிவார்? என அடிக்கடி யோசிப்பேன்.

நான் ஒவ்வொரு முறை சென்னையிலிருந்து வரும் போதும் அந்த வீட்டினை யாராவது புதுப்பிக்கிறார்களா என்று பார்ப்பேன். அப்படியே இருந்தது. யாரும் வரவில்லை.
என் பெரியப்பா அத்தை வெளி நாட்டில் இருப்பதால் வருடத்துக்கு ஒரு முறை வருவார்கள்.

நாங்கள், பெரியப்பா அத்தை என அனைவரும் ஏப்ரல் மே மாத விடுமுறையில் வரும்போது எங்கள் வீடு கோலாகலமாக இருக்கும். பாட்டி விதவிதமாக பலகாரங்கள் செய்து தருவார். வீடு முழுவதும் நெய் வாசம் மணக்கும். தொட்டு விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாடுவோம். அத்தை மருதாணி இட்டு விடுவாள். அடுத்த நாள் எழுந்து யார் கை அதிகமாக சிவந்துள்ளது என அடுத்தவர் கை பார்ப்போம்.

அப்போது சித்திரை மாத கோவில் பண்டிகை நடக்கும். ஊரே அமர்க்களப்படும். இரவினில் அம்மன் ஊர்வலம் நடக்கும். அப்போது நடு நாயகமாக ஒருவர் நாக்கில் வேல் குத்தி கண் சிவந்து ஆடிச் செல்வார். அதை பார்த்து மிரட்சி ஆகி அழுவேன். என் பாட்டி என்னை சமாதானப்படுத்துவார். நிறைய மாடுகள்.மாட்டு வண்டி சவாரி.நிறைய வேலையாட்கள்.தென்னந்தோப்பும்,.கிணறும் அங்கு உள்ள சினிமா கொட்டகையில் பெஞ்சில் அமர்ந்து சினிமா பார்ப்போம். நிறைய வித்தியாசமான அனுபவங்களை பெற்றோம்.

என் தாத்தா விடிகாலையில் எழுந்து காவேரி ஆற்றில் குளித்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டுதான் வீட்டுக்கு வருவார். அவருடன் நானும் சீக்கிரம் எழுந்து ஆற்றுக்குச் செல்வேன்.
அவர் துணியை அவரே துவைத்து ஒட்டப் பிழிந்து வீட்டுக்கு எடுத்து வருவார். எதிலும் சுத்தம், நேர்த்தி எனக்கு பிடித்தமானதாக இருந்தது. அவ்வாறு செல்லும்போது மறுகரையில் பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருப்பதை பாத்திருந்தேன்.

“ஏன் தாத்தா நிறைய வீடு பூட்டி இருக்கு?”

“எல்லாரும் உன் அப்பா, பெரியப்பா மாதிரி நகரத்துக்கும் வெளி நாட்டுக்கும் போயிட்டா

பெரியவாளும் இங்க இருந்து என்ன பண்ண போறோம்னுட்டு வீட்டை வித்துண்டு அவா குழந்தைகளோட போயிட்டா.”

“தாத்தா நீங்க இங்கேயே இருங்கோ, எங்களோட ஊருக்கு வர வேணாம்?”

“ஏண்டிமா இப்படி சொல்ற. தாத்தாவை பிடிக்கலையா?”

“அப்படி இல்ல தாத்தா.. நீங்களும் எங்க கூட வந்துட்டேள்னா, நம்ம வீடும் இப்படி ஆயிடும்தானே அதான் சொன்னேன்.”

“ஹா ஹா…” என சிரித்தார்.

“நான் அப்படி எல்லாம் நம்மாத்தை விக்க மாட்டேண்டா. இது என் தாத்தா காலத்துல கட்டினது”என்றார்.

எனக்கு நிம்மதியாக இருந்தது.

என் தாத்தாவுக்கு என் மேல் மிகவும் பிரியம். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பெண் குழந்தைகள் இல்லை. நான் மட்டும்தான். அதனால் எல்லாருக்கும் நான் செல்லமாக இருந்தேன். என் தாத்தா எனக்கு மரப்பாச்சி பொம்மை வாங்கி கொடுத்தார். நான் அதற்கு மையிட்டு,பொட்டு வைத்து, என் சிறிய பச்சை நிற சுடிதார் துப்பட்டாவை சேலையாக அணிவித்தேன். சாப்பிடும் நேரம் தூங்கும் நேரம் கூட கையில் வைத்து இருந்தேன்.

சில வருடங்களில் என் பாட்டி இறந்து போனார். எங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. குறிப்பாக தாத்தாவுக்கு. அவர் மிகவும் தளர்ந்து போனார். அப்பா எங்களுடன் வந்து இருக்கும்படி அடிக்கடி ஊருக்கு சென்று அழைப்பார். அவர் உறுதியாக மறுத்தார். பாட்டி போனதும் தாத்தா அதிக மாதங்கள் இருக்கவில்லை. அவரும் ஒரு வருடத்தில் இறந்தார். எனக்கு மீட்க முடியாத இழப்பாகி போனது என் தாத்தாவின் இறப்பு

மறுமுறை என் பெரியப்பா, அத்தை இந்தியா வந்த போது மூவரும் வீட்டையும் நிலபுலங்களையும் விற்பது பற்றி பேசினர். இனி அங்கு யாரும் இல்லை. அவற்றை விற்று நகரத்தில் நிலம் வாங்கி போட்டால் எதிர்காலத்தில் பயனாகும் என பேசிக் கொண்டனர். அந்த வீட்டிலுள்ள பொருட்களை மூவரும் பிரித்துக் கொண்டனர். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பாவிடம் தாத்தா ஞாபகார்த்தமாக வீடு மட்டும் விற்க வேண்டாம் என்று கெஞ்சினேன். அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு அங்கு செல்வது அடியோடு நின்று போனது.

வருடங்கள் கரைந்தது.
எனக்கும் படித்து முடித்த கையோடு வேலை கிடைத்தது. பின் மணம் முடித்து வெளி நாட்டில் செட்டில் ஆனேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுது தாத்தாவின் வீடு மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும்.

இந்த முறை ஓர் உறுதியோடு வந்தேன். இந்தியா வந்ததும் என் அப்பாவிடம், “அப்பா நம்ம கிராமத்து வீட்டை போய் பாக்கலாம்னு இருக்கேன். அது மட்டுமில்லாம அதை வாங்கிற எண்ணம் கூட இருக்குப்பா. அவரை கேட்டேன். அவரும் சரினுட்டார்..” என்றேன்.

அப்பாவுக்கு உறுத்தி இருந்திருக்கும். என்னை நேராக பார்க்க இயலவில்லை. கண்களில் கண்ணீர் தளும்பியது.

நான் என் கணவர், என் குழந்தைகளுடன் கிராமத்துக்குச் சென்றோம்…
கிராமம் முற்றிலும் மாறி இருந்தது. தன் சுயத்தை இழந்திருந்தது. நிறைய மாற்றங்கள், புதிய கட்டிடங்கள், புதிய வீடுகள் என மாறி இருந்தது.
எங்கள் வீடு அருகிலிருந்த அந்த இடிந்த வீடு வேறு மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எங்கள் வீடு நெருங்கியவுடன் பரவசமாக இருந்தது.

துக்கம் அடைத்தது.

வீட்டின் வெளியே பெரிய பூட்டு தொங்கியிருந்தது. அது துரு பிடித்துக் காணப்பட்டது. வெகு நாட்களாய் திறக்கப்படவில்லை எனத் தெரிந்தது. எங்கள் வீட்டை யார் வாங்கி இருக்கிறார்கள் என அப்பாவிடம் விவரம் கேட்டு வாங்கி இருந்தேன். ஊரில் சண்முக வேல் என்பவர் வாங்கி இருந்திருக்கிறார். அவரிடன் சென்று விவரம் கூறினேன்.

“கையில கொஞ்சம் பணம் சேந்ததும் அதை இடிச்சுட்டு நாலஞ்சு வீடா கட்டி வாடகைக்கு விடலாம்னு நினைச்சேன். இப்பதான் சேந்துச்சு.. நீ வந்து கேக்கற. உங்க வீட்டை நீங்களே கேக்கறப்போ எப்படிமா முடியாதுன்னு சொல்வேன். நீயே வாங்கிக்கோ. அதுக்கு முன்னாடி உங்க தாத்தா வீட்டைப் போய் பாரு,” என சாவியை கொடுத்தார்.

இவருக்கு புரிந்தது, ஏன் அப்பாவுக்கு புரியவில்லை. இது வெறும் வீடு இல்லை. என் தாத்தாவாக வியாபித்திருந்தது. வீடு முழுதும் உணர்வுகளும் பாசமும் நிரம்பி உயிர் பெற்றுள்ளது. என்னை புரிந்த அந்த பெரிய மனிதர் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
வீட்டை திறந்து உள்ளே சென்றேன். நாங்கள் ஓடியாடிய பகுதிகளும், ஊஞ்சல் கட்டி இருந்த இடமும், பலகாரங்களை சாப்பிட ஒளிந்து சென்ற சமையலறையும் பார்த்துக் கொண்டே சென்றேன். பூஜையறையின் பக்கத்தில் உள்ள சிறிய முகப்பில் பாட்டி தினமும் விளக்கு ஏற்றுவாள். கறுமை படர்ந்த அந்த இடம் அப்படியே இருந்தது. தொட்டுப் பார்த்தேன். பரவசமாக இருந்தது.

பின்பகுதியை கொஞ்சம் இடித்திருந்தார்கள். தரை முழுவதும் செங்கலும், மண்ணுமாக காணப்பட்டது…

இடிபாடுகளுக்கிடியே காபி நிறத்தில் ஏதோ தென்பட்டது. இழுத்துப் பார்த்தேன்.

மரப்பாச்சி பொம்மை. என் தாத்தா வாங்கிக் கொடுத்த அதே மரப்பாச்சி பொம்மை. நான் இங்கே வந்த பொழுது இங்கேயே மறந்து வைத்திருக்கக் கூடும். நான் கட்டி வைத்திருந்த பச்சை நிற துப்பட்டா, வெயில் பட்டு வெளிறி போயிருந்தது. என் கண்ணில் வெளிப்பட்ட கண்ணீர் சொட்டு சொட்டாக பட்டுத் தெறித்தது அந்த பொம்மையில்….

படித்ததில் பிடித்தது.
நன்றி:ஹேமி கிருஷ்.

Leave a Reply