​விக்ரம் வேதா

நல்ல ரவுடி – கெட்ட போலீஸ் வரிசையில் இன்னும் ஒரு படம் இது. திரைக்கதையின் பலத்தால் வீரியமாய்த் தென்படுகிறது.

விக்ரம் ஔர் வேதாள், விகிரமாதித்தனும் வேதாளமுமாக மாறி, இப்போது விக்ரம் வேதாவாகத் திரிபடைந்திருக்கிறது.
கார்ட்டூன் காட்சிகளுடன் அசத்தல் ஆரம்பம் கதையின் போக்கைச் சொல்கிறது.
இயக்குநர் தம்பதி புஷ்கர் – காயத்ரிக்கு ஓர் இரட்டை சல்யூட். நேர்த்தியான திரைக்கதை, தொய்வில்லாத எடிட்டிங், விஜய் சேதுபதியின் அலட்டிக்கொள்ளாத அற்புத நடிப்பு எல்லாம் சேர்ந்து படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.
தாதாக்களின் நிழல் வாழ்க்கையை அச்சு அசலாய் நேரில் பார்க்கச்செய்த காட்சி அனுபவத்துக்கு ஒரு சபாஷ்!

திரையுலகில் மூத்தவர் (முதியவர் அல்ல) என்ற ஈகோ இல்லாமல் மாதவன், விஜய் சேதுபதியுடன் சமமாய் மல்லுக்கட்டியிருக்கிறார். மாதவனும் விஜய் சேதுபதியும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

வரலட்சுமி நடிப்பு ஓக்கே. குரல்தான் கிலேசமடையச் செய்கிறது. 
காதலியின் கோபத்தைத் தணிக்க வி.சேவின் தம்பி செய்யும் காரியம் ஆபாசம்.
 ‘எஞ்சினியர் என்பதில் என்ன பெருமை இருகிறது?’ ‘காந்தியின் அப்பா காந்தியா?’  போன்ற வசனங்கள் ஆங்காங்கே நிரம்பி, கைதட்டல் பெற்றுத்தருகின்றன.
இருட்டில் தொலைத்துவிட்டு, வெளிச்சத்தில் தேடும் முல்லா கதையை நல்லாத்தான் சொல்கிறார் வி.சே. தன்னுடைய வட சென்னை சிங்காரத் தமிழில்.
ஊடல்கொண்டிருக்கும் கதாநாயகி ஷ்ரதா ஸ்ரீநாத், கணவன் மாதவன் அருகே வர, ஆழ்ந்து சுவாசித்து, அந்த மணத்தில் மனம் கிறங்கிக் காதலாகிக் கசிந்துருகுவது போன்ற நுணுக்கமான காட்சிகளும் அநேகம்.
தோழரின் மரணச் செய்தியை மௌனத்தாலே மாதவன் சொல்வதும், அதை உணர்ந்துகொள்ளும் தோழனின் மனைவியும்… பிரமாதமான காட்சி!
‘டஸாங்கு டஸாங்கு டும் டும்’ பாடல் இன்னும்  சில காலம் பண்பலை வானொலியில் நிச்சயம் இடம்பெறும்.
பின்னணி இசை, வசனங்களைச் சில சமயம் அமுக்கிவிடுகிறது. கவனித்திருக்கலாம்.
வழக்கமாகக் கதாநாயகர்கள்  அரிவாள் வீச்சிலிருந்தானே சாய்ந்து தப்புவார்கள்? இதில் புல்லட்டுக்கே பெப்பே காட்டி சாய்ந்து நிமிரும் அபூர்வக் காட்சி உண்டு.
கடந்த பத்து ஆண்டுகளில் திரைப்படத் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறிய தோட்டாக்களை விட இந்தப் படத்தில் சீறிய குண்டுகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகம்.

‘என்கவுன்டர் செய்வது எப்படி?’ என்று நிதானமாக செய்முறை விளக்கம் அளிக்கிறார்கள். சரிதான்… என்கவுன்டரைப் படம் நியாப் படுத்துகிறதா? எதிர்க்கிறதா? வேதாளம்தான் பதில் சொல்ல முடியும்.

விக்ரம் வேதா: அபூர்வ தாதா.

************

Leave a Reply