​நடிகர் சந்திரபாபு

 எம்.ஜி.ஆரை ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!
ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும்போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!

சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். ‘சகோதரி’ படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!
ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின்போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!
நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். ‘சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!
மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். ‘மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்” என்றவர்!

ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’ பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட… உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. ‘கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ… ஜனாதிபதியும் மகிழ… உற்சாகமானபொழுது அது!

நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. ‘ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!
‘நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒருநாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!
            – Vikatan EMagazine

Leave a Reply