விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

​பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதுகளை குவித்து, 3 தேசிய விருதுகளையும் அள்ளிய வெற்றிமாறனின் ‛விசாரணை’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெற்றி மாறன், அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரை லீடு ரோலில் நடிக்க வைத்து இயக்கிய படம் ‛விசாரணை’. வெற்றி மாறனும், தனுஷூம் இணைந்து தயாரித்த இப்படம், சந்திரகுமார் எழுதிய லாக்-அப் என்ற நாவலை மையப்படுத்தி உருவானது. சிறையில் கைதிகள் படும் அவலத்தை இப்படம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது. விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் குவித்தது. அதுமட்டுமின்றி சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டர், சிறந்த தமிழ்ப்படம் என மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது.

தேசிய விருதோடு மட்டுமல்லாது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று விருதுகளை அள்ளியுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவிற்கும் தேர்வானது.

இந்நிலையில், சினிமா துறையில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இதில், இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‛விசாரணை’ படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விசாரணை படத்திற்கு பல கவுரவங்கள் கிடைத்த நிலையில் இப்போது ஆஸ்கருக்கும் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது கூடுதல் கவுரவத்தை தந்துள்ளது

dinamalar

Leave a Reply