பிறந்த நாளில் அழுத கமல்

கமலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

இந்தப் பிறந்தநாள் குறித்து கமல் பேட்டியளித்ததாவது:

மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் ஓய்வில் உள்ளேன். பெரும்பாலான நேரங்களில் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருக்கிறேன். எனவே பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது. இதேநாளில் பிறந்தநாள் கொண்டாடும் என் சினிமாத்துறையைச் சாராத நண்பர்களுடன் எப்போதும் ஒன்றாக இருப்பேன். ஆனால் இந்தமுறை அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டேன். வலி அதிகமாக உள்ளது.

வலிகள் எனக்குப் புதிது அல்ல. என் வாழ்க்கையில் அவற்றை எப்போதும் எதிர்கொண்டுள்ளேன். ஆனால், பிறந்தநாளன்று, உங்கள் ரசிகர்கள் உங்களைப் பார்க்க விரும்பும்போது அதற்கு மறுப்பு தெரிவிப்பது சங்கடமாகத்தான் உள்ளது என்கிறவரிடம் இதுதான் உங்களுடைய சோகமான பிறந்தநாளா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: இல்லை. 16-வது பிறந்தநாள் தான் எனக்கு மிகவும் கடினமானது. அப்போது எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இருந்தேன். எத்திசையில் செல்லவேண்டும் என்று தெரியாது. எதற்காக வாழ்கிறேன் என்றும் தெரியாது. என் அப்பா என்னை அழைத்து நன்குக் கண்டித்தார். ஓர் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு கதறி அழுதேன். என் பிறந்தநாளன்று அழுதது அப்போதுதான்.

இதுபோல இருப்பது மிகவும் கடுப்படிகிறது. சீக்கிரம் களத்தில் இறங்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தை நான் முடிக்கவேண்டியுள்ளது. வேலைகள் உள்ளன. ஆனால் நான் வலியால் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறேன். எனக்கு எப்போதும் தேவையாக இருப்பது – வேலையும் திரும்பிவருவதற்காக வீட்டில் ஒருவரும் என்றார்.

Leave a Reply