நீரில் மூழ்கிய நடிகர்கள்

கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது, நீர்த்தேக்கத்தில் வில்லன் நடிகர்கள் 2 பேர் மூழ்கியதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 2 நடிகர்களும் சண்டைக்காட்சியில் ஈடுபடும் முன்பு அளித்த பேட்டியில் அக்காட்சி குறித்த தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், மாகடி வட்டம், திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் துனியா விஜய் கதாநாயகனாக நடிக்கும் மஸ்திகுடி கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதிக் காட்சிக்காக ஹெலிகாப்டரிலிருந்து கதாநாயன் துனியா விஜய், வில்லன் நடிகர்கள் அனில், உதய் ஆகியோர் நீர்த்தேக்கத்தில் குதித்தனர். நீரில் குதித்த துனியா விஜய் உடனடியாக நீந்தி அருகிலிருந்த படகில் ஏறினார். ஆனால், அவருடன் குதித்த வில்லன் நடிகர்களான அனில், உதய் ஆகியோர் நீந்த முடியாமல் நீரில் மூழ்கினர். உடனடியாக படக் குழுவினர் அங்கு சென்றும் அவர்களை மீட்க முடியவில்லை. .

தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து நீரில் மூழ்கிய வில்லன் நடிகர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

குதிக்கு முன் அளித்த பேட்டி

இந்நிலையில் இந்தக் காட்சி படமாக்கப்படும் முன்பு இரு நடிகர்களும் தொலைக்காட்சி சேனல்களுக்குப் பேட்டியளித்துள்ளார்கள். அனில் கூறும்போது, உயரத்திலிருந்து குதிப்பது இதுவே முதல்முறை. அதனால் எனக்குப் படபடப்பாக இருக்கிறது. என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாது. எனக்கு ஓரளவுதான் நீச்சல் தெரியும். கிணற்றில்மட்டும்தான் நீச்சல் செய்துள்ளேன். அந்தளவுக்குதான் நீச்சல் தெரியும். 30 அடி, 60 அடி ஆழத்தில் நீச்சல் செய்ததில்லை என்று கூறியுள்ளார்.

உதய் அளித்த பேட்டியில், இந்தக் காட்சிக்காக பெரிய பயிற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. நாங்கள் மூன்று பேரும் குதிக்கவேண்டும். அதுமட்டும்தான் தெரியும். எனக்கு உயரத்திலிருந்து குதிப்பதென்றால் பயம். இதுபோன்ற சண்டைக்காட்சியில் முதல்முறையாக நடிக்கிறேன். மற்றதெல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராம்நகர் காவல் கண்காணிப்பாளர் சந்திரகுப்தா கூறியது: உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், படக்குழுவினர் அலட்சியமாக படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். நீரில் மூழ்கி 2 நடிகர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதலில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணி நடைபெறும். பின்னர் சம்பந்தப்பட்ட படக் குழுவினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Leave a Reply