சரத்குமார் ராதிகா

ஒவ்வொருமுறையும் சரத்குமார் ராதிகா ஜோடி புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகும் போது, உனக்கு இவ எத்தனையாவது பொண்டாட்டி, உனக்கு இவன் எத்தனையாவது புருசன் போன்ற கூப்பாடுகள் சாட்சாத் பேஸ்புக் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திகள் சூழ் உலகில் பேசப்படும்.
தனிப்பட்ட திருமண வாழ்வு தோல்வியில் முடியும்போது,அடுத்ததாக ஒரு மறுமணத்தை முடிப்போர் மீது வழக்கமாக வாரி இறைக்கும் சேறும் சகதியும்தான் என்றாலும், தமக்கு விருப்பமான வாழ்வை வாழ்வதில் கூட மனதை கிழிக்கும் பகடிகளை இவர்கள் எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.பத்தினி தன்மை என்பதும் கற்பு என்பதும் மறுமணம் செய்துக் கொள்பவர்களுக்கு இல்லை என்பது போல் பேசுவோர்களின் பேச்சுகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
பொதுவாழ்விலும் திரையுலகிலும் சரத் ராதிகா இருவரும் கண்டிராத பெண்களா ஆண்களா? இவர்களை தாண்டி திருமண பந்தத்தில் இணைந்தவர்களை காதல் என்றொரு புள்ளி மட்டுமே இணைத்து இருக்ககூடும்.
தனிமனிதனின் கற்பு தன்மை என்பதன் கண்ணியம் யாருடன் வாழ்கையை பகிர்ந்து கொள்கிறோமோ அவர்களுக்கு நேர்மையாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் அன்பை செலுத்துவது மட்டுமே.தோல்வியில் முடிந்த இல்லற வாழ்க்கையை தற்போது ஒப்பிட்டு பேசுவதும் ஏளனம் பேசுவதும் தரக்குறைவான தனிநபர் தாக்குதல்கள்.
 நாம் சரத்குமாரின் அரசியல் நிலைப்பாட்டை பற்றி பேச ஆயிரம் விஷயங்கள் உள்ளது.ராதிகாவின் டிவி சீரியல் பற்றி பேச ஆயிரம் இருக்கிறது. அவர்களின் தனிப்பட்ட படுக்கையறைகளை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது?பகிரங்கமாக திருமணம் செய்துக் கொண்டு ஒரு திருமண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் வேஷ்டியிலும் ராதிகாவின் சேலையிலும் ஒரு உயர்ந்த கற்பு இருக்கதான் செய்கிறது.

Leave a Reply