உதிரிகள்

1980களில் இப்படி உதிரியாக எத்தனை கவர்ச்சி நடிகைகள்…
♨♨♨♨♨♨♨♨♨♨

1980களின் Item dancer தான் சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஏலூரு சொந்த ஊர். அவருடைய பிரபலத்தின் தாக்கத்திற்கு இதை விட வேறு எதைச்சொல்லமுடியும்?
கமல் ஹாசன் தந்தை சீனிவாசனுக்கு சில்க் ஸ்மிதா மீது ஒரு OBSESSION!

“ என் அப்பாவுக்கு பிடித்த நடிகை சில்க் தான். சில்க் ஷுட்டிங் இருந்தால் ஸ்டுடியோவுக்கு வர ஆசைப்படுகிறார்!” என்று உற்சாகமாக பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார்.
சில்க் ஸ்மிதாவுடன் சீனிவாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட பத்திரிக்கையில் பிரசுரமானது.
சில்க் மீதான ’ரசிக ரசனை’ பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு கவர்ச்சி நடிகைக்கு இப்படி ஒரு FANATICISM இருந்ததேயில்லை என்று தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்தியாவே குறியீடாக மூக்கில் விரல் வைத்தது.
1960களில் சாமுத்ரிகா லட்சண அம்சங்கள் அத்தனையும் பொருந்திய கவர்ச்சிக்கன்னி ஜோதிலட்சுமிக்கே கூட இப்படி இருந்ததில்லை. விஜயலலிதாவுக்கு,ஜெய்குமாரிக்கு இப்படியில்லை.
1970களில் ஜெயமாலினி இந்த சில்க் பவுசில் ஒரு சிறு அளவு கூட காண வாய்க்கவில்லை.
வண்டிச்சக்கரம் “ வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை!ஊத்திக்கிட்டே கேளேன்டா என்னோட பாட்டை!” பாடலில் சில்க் ஸ்மிதாவைப்பார்த்தவுடனேயே ரசிக பெருமக்களுக்கு வியர்த்துப்போய் விட்டது.


”நேத்து ராத்திரி அம்மா..தூக்கம் போச்சுடி அம்மா….” கமலோடு சகலகலாவல்லவனில் ”பொன்மேனி உருகுதே” மூன்றாம்பிறையில்.
வாலிப ரசிகப்பட்டாளம் “ தங்கத்தகட்டழகி, தாமரை முகத்தழகி, சிரிக்கும் சிங்காரி, கட்டான உடை உடுத்தி சிட்டாகப் பறந்து வரும் தென்ன மரத்து சிட்டு, தேன் போன்ற லட்டு, தட்டு,லொட்டு, எங்கள் வீட்டு எவர்சில்வர் தட்டு போன்ற கன்னங்கள் படைத்த சில்க்கம்மா! கற்கண்டு போன்ற சொற்கொண்டு வீசி பொற்கொண்டு, உள்ளத்தில் இருப்பவளே! என்னவளே! பொன்னவளே! உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகுதடி! சில்க்கம்மா! என் கண்ணம்மா!” என்றெல்லாம் என்னமா கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா!
ரஜினி “ பேசக்கூடாது! வெறும் பேச்சில் சுகம் ஏதுமில்லை!லீலைகள் காண்போம்!” அடுத்த வாரிசு.
தங்க மகனில் ரஜினி சில்க்கிடம் “அடுக்கு மல்லி! இது ஆள் பிடிக்குது!”

🚨

”சில்க்,சில்க்,சில்க்” என்றே ஒரு திரைப்படம் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் கோபிநாத்( நடிகை சுலக்சனாவின் முன்னாள் கணவர்) தயாரித்து வெளிவந்தது.

’அலைகள் ஓய்வதில்லை’யில் ஒரு கேரக்டர் ரோல் செய்தபோதும் ’கோழி கூவுது’, ’அவசர போலீஸ்’ படங்களில் ஒரு கதாநாயகியாக வந்தபோதும் அவரிடம் ஒரு EROTICISM இருந்தது என்பதே உண்மை.

அந்த கண்கள். வாயைக்கோணிக்கொண்டு அவர் சொல்லும் ”மாமா” கிளர்த்தியது.
தன்னுடைய இருபதுகளில் 1980களில் கலக்கிய சில்க் ஸ்மிதா முப்பத்தாறாம் வயதில் தற்கொலை செய்து கொண்ட போது எல்லோருக்கும் தவிர்க்கமுடியாமல் ஹாலிவுட்டின் மர்லின் மன்றோ தான் நினைவில் நிழலாடினார்.


ஒரு லாரி டிரைவர். ஹைவேஸில் லாரி ஓட்டுபவர் அப்போது ஆந்திராவிலிருந்து வந்திருந்தார். சில்க் ஸ்மிதாவின் உடன் பிறந்த சகோதரர். அந்தஸ்தும் வசதியுமான வாழ்க்கையில் சில்க் தன் ரத்த சொந்தங்களை நெருங்க விடவில்லை என்பது விசித்திரம் தானா? எப்போதும் ஒரு தாடிக்காரர் அவரோடு நிழலாக இருந்தது கூட வினோதம் தானா?

13 வயதிலேயே மலையாளப்படத்தில் நடித்து விட்ட அனுராதா சிவப்பு மல்லியில் ஒரு கதாநாயகியாக தமிழில் தெரிய வந்தார். நடன இயக்குனர் கிருஷ்ணகுமாரின் மகள் தான் அனுராதா. அப்போது ஒரு காதல் உறவு. காதலனுடன் தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தம் கூட ஏற்பட்டதுண்டு. முப்பது படங்களுக்கு மேல் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி அடைந்ததில்லை.
திசை மாறி திரையில் கவர்ச்சி கன்னியாக கண்ணெதிரே தோண்றினார். அனுராதாவுக்கு எப்போதும் தன் சாயல் பற்றி ஒரு பெருமை உண்டு. “நான் நடிகையர் திலகம் சாவித்திரி சாயலில் இருப்பதாக பலரும் சொல்லியிருக்கிறார்கள்!”
குடும்ப பாங்கான நடிகை சாவித்திரி கூட விரசம் தெரிய “சுழி” என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

அனுராதாவின் கவர்ச்சி நடனத்தில் உடனே நினைவுக்கு வருவது ரஜினியின் தங்கமகனில் ’மச்சான பாரடி, மச்சமுள்ள ஆளடி!’.
’அலைகள் மிதக்குது, நிலவொன்று குளிக்குது’ என்று அனுராதா ஆட்டம் போட்டது மேஜர் சுந்தர்ராஜனின் இயக்கத்தில் கமல், ஊர்வசி நடித்த ’அந்த ஒரு நிமிடம்’.

அர்ஜுன் நடித்த ‘எங்கள் குரல்’. இதில் ’அடி வாடி மானே, மரிக்கொழுந்தே!’ என்று அனுராதாவுக்கு ஒரு கவர்ச்சி நடனப்பாடல்.
அனுராதா ஆடி ஓய்ந்த பின் உடல் ஆரோக்கியமில்லாத கணவருக்கு NURSING செய்து கொண்டு இருப்பதைப்பற்றிக்கூட டி.வி.பேட்டியொன்றில் அனுராதா சொன்னார். 2007ம் ஆண்டு இவருடைய கணவர் இறந்து விட்டார்.

அபினயாஸ்ரீ என்று ஒரு மகள். இவரும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

அப்புறம் டி.வி. சீரியலில் அனுராதா நடிகர் விஜயகுமாருக்கு வயதான தங்கையாக, ரம்யா கிருஷ்ணனுக்கு அத்தையாக…
டிஸ்கோ சாந்தி மிகவும் நிர்ப்பந்தமான சூழலில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மூத்த பெண் பிள்ளையாக நடிக்க வந்தவர். அப்பா சி.எல்.ஆனந்தன் சினிமாவில் மார்க்கெட் இழந்த நிலையில் ஊர் ஊராக நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த போது, அவரை புக் செய்ய வருகிற எக்ஸிபிஷன் காண்ட்ராக்டர்களிடம் ”டீ சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்கும் ஆனந்தன், அவர்களிடமே அதற்கு பணம் கேட்டு வாங்கி சிறுமி சாந்தியைக் கூப்பிட்டு டீக்கடைக்கு அனுப்புவார்.
ஆண்டுக்கணக்கில் சரியான திரை வாய்ப்புக்காகப் போராடி ஒரு வழியாக ’ராத்திரி நேரத்து பூஜையில், ரகசிய தரிசன ஆசையில்’ சூப்பர் ஹிட் பாடல் மூலம் கவர்ச்சி நடிகையாக வெளிச்சத்துக்கு வந்தார்.
ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் தயாரித்த படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு வெளிவந்த ‘ஊமை விழிகள்’ ஆபாவாணன் இயக்கம். இந்தப்படம் அப்போது கொஞ்ச காலமாக ஈ ஓட்டிக்கொண்டிருந்த விஜயகாந்த்தைக்கூட பிஸியாக்கியது.

’வெற்றி விழா’ பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல் ஹாசன் ஆக்ஷன் ஹீரோவாக தூள் கிளப்பிய படம். டிஸ்கோ சாந்திக்கு அதில் கலக்கலாக நடனமாட “ தத்தோம் தலாங்கு தத்தோம்! தொட்டும் தொடாமல் தொட்டோம்!” வாய்த்தது.
பிரபுவின் ’சின்னவர்’. இதில் டிஸ்கோ சாந்திக்கு ‘படகோட்டும் பட்டம்மா! பாட்டொன்று கட்டம்மா!’

தங்கை லலிதகுமாரிக்கு பிரகாஷ் ராஜுடன் காதல் திருமணம் தான் என்றாலும் நிறைய நகை போட்டு டிஸ்கோ சாந்தி கட்டிக் கொடுத்தார். அந்த திருமண பந்தத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் ரத்து பெற்று விலகிய போது லலிதகுமாரியை விடவும் டிஸ்கோ சாந்தி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். லலிதகுமாரியின் குடும்பத்தையும் இவரே தான் கவனிக்க வேண்டிய நிலை.

ஸ்ரீஹரி என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்த டிஸ்கோ சாந்தி இப்போது விதவை. இரண்டு வருடம் முன் ஸ்ரீஹரி மறைந்து விட்டார். இரண்டு மகன்கள்.

அமீர்ஜான் இயக்கிய முதல் படம் ’பூ விலங்கு’ மூலம் கதாநாயகியாக குயிலி அறிமுகமானார். முரளிக்கும் தமிழில் இது முதல் படம். மூன்றே ஆண்டுகளில் மணிரத்னத்தின் ’நாயகன்’ படத்தில் ’நிலா அது வானத்து மேலே, பலானது ஓடத்து மேலே’ என்று ‘பலான’ கவர்ச்சி நடிகையாக குயிலி! 

சித்ரா லட்சுமணன் இயக்கிய ’சூர சம்ஹாரம்’.

குயிலி தான் ‘ வேதாளம் வந்திருச்சி’ பாடலில் கவர்ச்சி நடிகை.
இப்போது அம்மா நடிகையாக டி.வி.சீரியலில் பார்க்கமுடிந்தது. கொனஷ்டைகளை குறைத்து நடித்தால் நன்றாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் படங்களில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் பிரபலமாக இருந்தார். நாகர்கோவில்காரர். பெயர் ஜஸ்டின். ’ரகசிய போலீஸ் 115’ ல் எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சி இவருடன் வித்தியாசமாயிருக்கும். குடியிருந்த கோயிலில் இவர் பேசும் சீரியஸ் வசனம் வேடிக்கையாக, கொஞ்சம் தமாஷாக இருக்கும். ‘நம்பாத பாபு, நம்பாத. இவன் ஒன் காதலி ஆஷாவோட ஆடுறான்,பாடுறான்’
இந்த ஜஸ்டின் மகள் பபிதாவும் 1980களில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் ஒரு ரௌண்டு வந்தார்.
’நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடல் காட்சியில் நடனமாடிய பபிதா, பின்னாளில் சிரிப்பு நடிகையாக பாக்யராஜின் ’பவுனு பவுனு தான்’ படத்தில் ஐஸ்ஃப்ரூட் ஐயராத்து மாமியாக தலை காட்டினார்.
நான் உதவி இயக்குனராக வேலை பார்த்த படத்தில்

 “ உனக்கொரு டேட், எனக்கொரு ரேட்! நீ அழைத்தால் நான் வருவேன்!” என்று கவிஞர் வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை க்ளப் டான்ஸ் ஆடினார். பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது. காட்சி படத்திலும் இடம்பெற்றது. அவர் யார்? பெயர் என்ன? என்று எவ்வளவு யோசித்துப்பார்த்தும் எனக்கு ஞாபகம் வரவில்லை! 

1980களில் இப்படி உதிரியாக எத்தனை கவர்ச்சி நடிகைகள் மின்மினி பூச்சிகளாய் மின்னி மறைந்திருக்கிறார்கள்!

Leave a Reply