விண்ணகர் ஆழ்வார்

அந்த ஊருக்கு செல்லவேண்டுமெனில் ஏரிக்கரையின் மீது தான் பயணிக்க வேண்டும், எந்த காலத்தில் யார் வெட்டிய ஏரி என தெரியவில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் பறந்து விரிந்து இருந்தது. மழை இல்லாமல் வறண்டு இருப்பதால், ஏரிக்கு உள்ளேயே ஷேர் ஆட்டோக்களும்,கனரக வாகனங்களும் சென்று கொண்டிருந்ததை காண முடிந்தது, ஏரிக்கு இருபுறம் வழி நெடுங்கிலும் பனைமரங்கள், இவற்றை எல்லாம் கடந்தோமேயானால் “தாதாபுரம்” என்ற ஒரு சிறிய கிராமம் உங்களை வரவேற்கும். பயப்படவேண்டாம் அங்கு தாதாக்கள் எல்லாம் கிடையாது. “ராஜராஜபுரம்” என்ற பெயர் தான் மருவி “தாதாபுரம்” என்று மாறிவிட்டது!.

ஊருக்குள் நுழைந்து கோயிலுக்கு வழி கேட்டோம், கை காட்டிய திசை நோக்கி பயணப்பட்டோம், சந்து பொந்தெல்லாம் திரும்பி ஒரு இடத்தை வந்தடைந்தோம், அது தான் கடைசி, அதற்கு மேல் சாலை இல்லை,
கருவேலமரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில், நாங்கள் தேடி வந்த பொக்கிஷம் எங்களை வரவேற்றது.

ஊரில் பெரிய மனிதர் ஒருவர் ஒரு காலத்தில் சீரோடும், சிறப்போடும், செல்வத்தோடும் வாழ்ந்தாராம், ஊர் காரியங்கள் அனைத்தும் அவரை சுற்றி தான் நடக்குமாம், அவரை தேடி நாளும் மக்கள் வந்த வண்ணம் இருப்பார்களாம், அவர் இல்லாமல் அணுவும் அசையாதாம், ஆனால் காலம் செல்லச் செல்ல அவருக்கு வயதாகி விட்டது, அவரை சொந்த மக்களே கவனிக்காமல் கைவிட்டு விட்டனர், வெகு நாட்களாக யாரும் சென்று அவரை பார்க்கவில்லை. படுத்த படுக்கையாக இருந்த அவரை பார்க்க சிலர் செல்கிறார்கள். “வருக, வருக நீங்களாவது என்னைத் தேடி வந்தீர்களே!” என்று கம்பீரமாக அவர் வரவேற்கிறார்.
“என்னை யார் என்று நினைத்தீர்கள், நான் ஒரு காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்தவன் தெரியுமா, என்னை யாரும் பார்க்க வராவிட்டால் என்ன! நான் யாருக்கும் சலைத்தவன் அல்ல என்பதைப் போன்று அவரின் பழைய கம்பீரம் சற்றும் குறையாமல் இருந்தது அந்த வரவேற்பில்! கதை புரிந்திருக்கும் என நினைகிறேன்!.

பறவைகளின் கீச்சொலியும், குழந்தைகளின் சிரிப்பு சத்தத்தையும் தவிர வேறெதையும் அங்கு கேட்க முடியவில்லை. அந்த அமைதி மனதிற்கு இதமளித்தது. கோயில் பூட்டி இருந்ததால் ஊருக்குள் இருந்த அய்யரை தேடி நான் சென்று விட்டேன், உடன் பயணித்த நண்பர்கள் நான் வருவதற்குள் கோயில் சுற்றி இருந்த கல்வெட்டுகளில் இருந்த அந்த முக்கியமான வரிகளை தேடி கண்டுபிடித்துவிட்டார்கள்!.

திரும்பி வந்ததும் கோயில் திறந்திருந்தது. உள்ளே பிறகு செல்லலாம் சோழ சாம்ராஜ்யத்தில், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கம்பீரமாக வாழ்ந்த மறைந்த அந்த பெண்மணியின் கல்வெட்டு எங்கே என்று தேடலாம் என்று கிளம்பிய போது, நண்பர்கள் கண்டுபிடித்த அந்த கல்வெட்டை காட்டினார்கள்.”உடையார் பொன் மாளிகை துஞ்சின தேவர் திருமகளார் பராந்தகன் ஸ்ரீ குந்தவை பிராட்டியார்” என்ற வரிகள் இருந்தது! ஆம் “குந்தவை விண்ணகர் ஆழ்வார்” என்ற இந்த கோயில் ராஜ ராஜனின் அக்கன், வந்தியத் தேவரின் மனைவி, கங்கை முதல் கடாரம் வரை வென்ற ராஜேந்திர சோழனின் அத்தை “குந்தவை பிராட்டியார்” அவர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுப்பப்பட்ட கற்றளி!. இந்த கோயிலை மேற்ப்பார்வை செய்யவும்,சீரோடும் சிறப்போடும் இருக்க துனைபுரியவும் ராஜ ராஜனின் முதல் மந்திரி “மும்முடிச் சோழன் பிரம்மராயர்’ நியமிக்கப்பட்டிருக்கிறார்! அப்படியானால் இந்த கோயில் ஒரு காலத்தில் எவ்வளவு சீரோடும் சிறப்போடும் இருந்திருக்கும்!

தாய் இல்லாமல் வளர்ந்த ராஜ ராஜனுக்கு அக்கா “குந்தவை” என்றால் உயிர். அதே போன்று தன் தம்பி ராஜ ராஜன் மீது அக்காளுக்கு உயிர்.
ராஜ ராஜன் தான் எழுப்பிய தஞ்சை கோயிலில் உள்ள கல்வெட்டில் கூட “நான் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும்” என்று தனக்கு அடுத்து தன் அக்காவை தான் முன்னிலைப் படுத்துகிறார், அதற்கு பிறகு தான் மனைவி, அதற்கு பிறகு தான் மற்றவர்கள். ராஜ ராஜன் கட்டிய பல கோயில்ககுக்கு குந்தவை பிராட்டியார் தாராளமாக பொன்னையும், பொருளையும் வாரி இறைத்திருக்கிறார்,

ஒரு படி மேலே சென்று நாங்கள் நின்று கொண்டிருக்கும் இந்த ஊரை உருவாக்கி இங்கு “சிவன்,விஷ்ணு,ஜைனம்” என மூன்று கோயில்களை எழுப்பி!. தான் உருவாக்கிய இந்த ஊருக்கு “இராஜராஜபுரம்” என்று தன் தம்பியின் பெயரையே சூட்டுகிறாள்!. என்ன ஒரு பாசம்! அக்காள் தம்பியை விட்டுக்கொடுக்கவில்லை, தம்பி அக்காளை விட்டுக்கொடுக்கவில்லை!.

மூலவரை காணச் சென்றோம், வரிசையில் நிற்கவில்லை, ஊர் கதை பேச மக்கள் யாரும் அங்கு இல்லை, உள்ளே செல்ல டோக்கன் வாங்கவில்லை, செல்போன்கள் கோயிலுக்கு சினுங்கவில்லை, கருவறைக்கு அருகே வந்ததும் எங்களை யாரும் பிடித்து தள்ளவில்லை, அரைமணி நேரம் பார்த்திருப்போம், குந்தவை நின்று வணங்கிய அதே இடத்தில் நின்று நாங்களும் வணங்கினோம், சோழ தேசத்து சிற்பிகளின் கைவண்ணம் அந்த சிலையில் மின்னியது! தெய்வீக முகமென்றால் அது தான்! யாருப்பா இந்த சிலையை செய்தது! நடப்பது அனைத்தையும் பார்த்து பெருமாள் சிரித்துக் கொண்டே இருக்கிறார்! அருகில் அவரின் மனைவிகள்! பிரிய மனமில்லாமல் பிரிந்தோம், அந்த அழகான பெருமாளை தேடி இனி அடிக்கடி வரவேண்டும் என்று உள் மனம் கூறியது.

இந்த கோயிலை கட்டி முடித்துவிட்டு அதன் நிர்வாகப் பொறுப்பை மும்முடிச் சோழன் பிரம்மராயனிடம் குந்தவை கொடுத்துவிட்டார், தான் இருந்த வரையில் தனக்கு அளித்த பொறுப்பை கண்ணும் கருத்துமாக காப்பாற்றினார் பிரம்மராயர், நாட்கள் ஓடியது, மாதங்கள் உருண்டது, பல நூறு வருடங்கள் கடந்தது, குந்தவை மறைந்து காற்றோடு கலந்தாள், ராஜ ராஜன் இறந்து சாம்பலாகிப் போனார், பழையாறை அழிந்தது, சோழம் வீழ்ந்தது, அந்த அற்புதமான நாகரீகம் தொலைந்தது, ஆயிரம் வருடம் கடந்தும் “விண்ணகர் ஆழ்வார்” என்ற கோயில் மட்டும் இன்று வரை நிலையாக உள்ளது! அதை “பாசம்” என்ற கற்கள் காலம் கடந்து தாங்கிப்பிடித்துக் கொண்டுள்ளது. ஒரே தாய் வயிற்றில் பிறந்து, விவரம் தெரியாத வயதில் ஒன்றாக விளையாடிய அந்த குழந்தைகளின் பாசம், வளர்ந்த பின்பும் தொடர்ந்தது என்பதை கல்வெட்டுகள் சொன்னது. இதயம் கனத்தது!.

படித்தது.
நன்றி திரு Sasi Dharan.

(திண்டிவனம் வந்தவாசி ரோட்டில் உள்ளது இந்த கிராமம்)

Leave a Reply