பிரார்த்தனை

ந்த ஊர் சுவாமியை தொடர்ந்து மூன்று புத்தாண்டுகள் தரிசனம் செய்தால் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. எனவே ஒவ்வொரு புத்தாண்டும் அந்த தலத்து இறைவனை தரிசிக்க கூட்டம் முண்டியடிக்கும். எங்கெங்கிருந்தோ மக்கள் படையெடுப்பார்கள். அதே ஊரில் ஒரு மிகப் பெரிய பக்தர் இருந்தார். அனைவர் மீதும் கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தும் பண்பாளரான அவர் அடுத்தவர்களுக்கு ஒரு தேவை என்றால் ஓடோடிச் சென்று உதவும் மனப்பான்மை உள்ளவர். அவர் மீது அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு தனிப் பாசம் இருந்தது. எனவே கோவிலுக்கு வரும் அந்த பக்தரிடம் அடிக்கடி நேரில் தோன்றி இறைவன் அளவளாவுவதுண்டு.

அன்று புத்தாண்டு தினம். மக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசித்தவண்ணம் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி படையெடுக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து வரும் அந்த பக்தருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறுபக்கம் ஒரு சந்தேகமும் ஏற்பட்டது.

 

அந்த சந்தேகம் என்னவென்றால் ‘பக்தர்கள் அனைவரும் திரண்டு வருகிறார்கள். ஆனால் ஒருவர் முகத்தில் கூட சந்தோஷம் இல்லையே. எதையோ பறிகொடுத்தது போல ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவர்கள் கேட்பதை இறைவன் தருவதில்லையா? அப்படி தரவில்லை என்றால் அது நம்பிக்கை துரோகம் அல்லவா?’ இப்படி பலவாறு சிந்தித்த அந்த பக்தர் இறைவனிடம் சென்று தனது சந்தேகத்தை கேட்டார். ” உன்னை நாடி வருவோருக்கு ‘வேண்டுவார் வேண்டியது ஈவான் கண்டீர்’ என்று தானே உன்னை போற்றுகிறார்கள். இத்தனை காலை வேளையிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் உன்னை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீ அவர்கள் கேட்பதை தருவதில்லையா? அது நம்பிக்கை மோசம் ஆகாதா?” கடவுளிடமே நியாயம் கேட்டார் அந்த பக்தர்.

பக்தரின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொண்ட இறைவன், அவர் முன் தோன்றி…”வத்ஸ…. யார் சொன்னது அவர்கள் கேட்பதை நான் தரவில்லை என்று? நீயே அவர்கள் சிலரிடம் சென்று கேட்டுப்பார். உண்மை புரியும்!” என்றான் சிரித்துக்கொண்டே.

இந்த பக்தரும் தரிசனம் நிறைவு செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்கள் ஒரு சிலரை அழைத்து, “சென்ற ஆண்டு நீங்கள் வரும்போது இறைவனிடம் என்ன கேட்டீர்கள்? நீங்கள் கோரியதை இறைவன் தந்துவிட்டானா?”

பெரும்பாலனோர் கார், பங்களா, நகை, தோட்டம், துரவு உள்ளிட்ட செல்வத்தை கேட்டதும் அவற்றை இறைவன் தந்துவிட்டதாகவும் கூறினர்.

 

இறைவனிடம் மீண்டும் சென்ற அந்த பக்தர், ‘இதென்ன அதிசயமாயிருக்கிறது? அவர்கள் கேட்டது  அனைத்தையும் நீ தந்துவிட்டது போல தெரிகிறது. அப்படியிருந்தும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை தெரியவில்லையே ஏன்?” என்று கேட்டார்.

“அது என் தவறல்ல. என்னிடம் பிரார்த்தனை  செய்த யாரும், எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும், தேக ஆரோக்கியத்தையும் தா என்று கேட்கவில்லை. வீடு, வாசல், செல்வம் உள்ளிட்டவற்றை தான் கேட்டனர். இவையெல்லாம் கிடைத்தால்  நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும் என்று அவர்கள் தாங்களாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷமோ நிம்மதியோ அவற்றால் கிடைக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய?” என்றாராம்.

எத்தனை உண்மை!

நாம் ஒரு பொருளை இறைவனிடம் கேட்கின்றோம்… அதனால் நமக்கு ஏதேனும் நன்மை உண்டா? நிம்மதி கிடைக்குமா? மகிழ்ச்சி உண்டாகுமா? என்று நமக்கு தெரியாது. ஆனால் ஆண்டவன் ஒருவனுக்கு தான் அதற்கு விடை தெரியும். எனவே என்றும் எப்போதும் இறைவனின் அருளையும், பரிபூரண கடாக்ஷத்தையும், நோயற்ற வாழ்வையும் மட்டுமே கேட்கவேண்டும்.

Leave a Reply