கர்ம வினை

 ண்மையான இறை பக்தியுடன் ஒவ்வொரு நாளையும் சுவாசித்துக்கொண்டு எவருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு துன்பங்கள் ஏற்படுவதும், தீமையே உருவாய் நின்று நியாய தர்மங்களை தூக்கி போட்டு மிதித்து அக்கிரமங்களை கூசாமல் செய்பவர்கள் சந்தோஷத்துடனும் இந்த உலகில் வாழ்ந்து வருவதை நாம் அன்றாடம் பார்த்துவருகிறோம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவன் மீது நமக்கு கோபமும் வருத்தமும் ஏற்படுவது உண்டு. “உன்னையே  அனுதினமும் நினைக்கிறேன். ஒரு புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைத்ததில்லை நான். எனக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று நம் மனம் குமுறுவது உண்டு.

தீயவர்களின் சந்தோஷமும் சுகபோகமும் அவர்களின் கர்மவினையால் வந்தது என்றே வைத்துக்கொள்வோம். அப்போது, நல்லவர்களின் பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் மதிப்பே இல்லையா? எல்லாவற்றையும் கர்மவினை தான் தீர்மானிக்கிறது என்றால் இறைவன் எதற்கு? அவன் மீது பக்தி எதற்கு? கோயில்கள் எதற்கு? என்ற கேள்வி எழுவது இயல்பே.

இறைவனை பொறுத்தவரை அவன் மிகச் சிறந்த ஒரு நீதிபதி ஸ்தானத்தில் இருப்பவன். அவனை எதைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. நமது உண்மையான பக்தியும், அன்பும் தவிர. அப்படி பக்தியையும் அன்பையும் நாம் கொடுக்கும்போது அவன் நியாயத்துக்கு புறம்பாக எந்தவித விதிவிலக்குகளையும் நமக்கு தருவதில்லை. ஆனால் தண்டனைகளை மாற்றியமைக்கிறான். அதன் கடுமையை குறைக்கிறான். அவன் அருள் கிடைக்கும்போது சராசரி மனிதர்களுக்கு தாங்க முடியாத துயரம் என்பது தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாறுகிறது.  தன்னையே அனுதினமும் துதித்து உத்தமர்களாக வாழ்ந்து வரும் மெய்யன்பர்களுக்கோ அந்த கடுமையே தெரியாத அளவிற்கு அவன் தாங்கிப் பிடிக்கிறான்.

நமது முந்தைய செயல்களின் விளைவால் (பெரும்பாலும் பூர்வஜென்மத்தில் ) தற்போது நமக்கு ஏற்படும் நிகழ்வுகளே ‘கர்மா’ எனப்படுவது. இதைத் தான் அறிவியலும் “Every action has equal and opposite reaction” என்று கூறுகிறது.

கர்மா மிகவும் வலிமையானது. அதிலிருந்து யாராலும் தப்ப இயலாது. கடவுள் நம்பிக்கை தீவிரமாக உடையவர்களுக்கு கர்மாவின் கடினம் தெரியாது. அல்லது அது ஏற்படுத்தும் தீய பலன்களின் தாக்கம் குறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு அது மிகவும் கடுமையாக இருக்கும்.

கர்மாவையும் கடவுள் அருளையும் இதை விட எளிமையாக, ஏற்றுக்கொள்ளும்படி விளக்க எவராலும் முடியாது.

கர்ம வினையும் கடவுள் நம்பிக்கையும்!

30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை! 30 வருடம் வீழ்ந்தவரும் இல்லை . ஜோதிடத்தில் சனி ஒரு சுற்று வர 30 வருடங்கள் ஆகும். அதனால் எந்த ராசி ஆக இருபின்னும் 7 1/2 சனியின் பாதிபையோ அல்லது திசை மாற்றத்தையோ சந்தித்தே ஆக வேண்டும் . இது அனைவருக்கும் பொருந்தும் விதி.

ஒரு சிறு கதை உண்டு. சதீஷ், ரமேஷ் என இரு நண்பர்கள். சதீஷ் கடவுள் மேல் அளவற்ற அன்பு உடையவன். ரமேஷோ கடவுள் மேல் நம்பிக்கை துளியும் இல்லாதவன். தவிர மனம்போன போக்கின் படி செல்லும் தவறான ஒரு வாழ்க்கை வாழ்பவன். நண்பனை திருத்த சதீஷ் எவ்வளவோ முயன்றும் பயனில்லை.

 ஒரு நாள் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். சதீஷ் கோவிலுக்கு உள்ளே சென்று கடவுளை மனமார வேண்டுகின்றான்.  ரமேஷோ கோவிலுக்கு உள்ளே செல்லாமல், “நீ போய்விட்டு வா. நான் இங்கே காத்திருக்கிறேன்” என்று கூறியபடி வெளியே நின்று கொண்டு, காலால் மணலை தள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றான்.

சதீஷ் கடவுளை சற்று நேரம் எடுத்துக்கொண்டு ஆலய தரிசனத்தை முடித்து இறைவனை வணங்கிவிட்டு திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக கோவில் மணியில் தலையை இடித்து கொண்டு நெற்றியில் அடிபட்டு, ஒரு சிறிய ரத்தகாயத்துடன் திரும்புகிறான்.

அங்கே வெளியே மணலில் விளையாடிக்கொண்டிருக்கும் ரமேஷோ மணலில் இருந்து ஒரு ஐநூறு ரூபா நோட்டை கண்டு எடுகின்றான். 

ரத்த காயத்துடன் திரும்பிய தன் நண்பனை பார்த்து சிரித்த ரமேஷ், “பார்த்தாயா ! கடவுளே கதி என இருக்கும் உனக்கு ரத்த காயம்; எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கு 500 ரூபாய் நோட்டு! இதிலிருந்தே தெரியவில்லை கடவுள் இருக்கிறார் என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல்!” என சொல்லி சிரிகின்றான்.

சதீஷ் பதில் சொல்ல தெரியாது விழிக்கின்றான். இது போன்று அன்றாட வாழ்க்கையில் நமக்கு பல சமயம் நடப்பதுண்டு.

இந்த காட்சியை மேலே இருந்தபடி பார்த்துகொண்டு இருந்த அன்னை பார்வதி இறைவனிடம், ரமேஷின் கேலியை சுட்டி காட்டி விளக்கம் கேட்கிறார். பரமேஸ்வரன் புன்முறுவலுடன் சொல்கிறார் ,”பார்வதி! கர்ம வினைப்படி , இப்பொழுது சதீஷுக்கு பெரும் துன்பம் வர வேண்டிய நேரம். ஆனால் அவன் நானே கதி என நல்வழியில் வாழ்ந்ததால், அவனுக்கு வர இருந்த பெரிய துன்பம் சிறிய காயத்துடன் போயிற்று!! ராமேஷுக்கோ அவன் விதிப்படி மிக மிக அதிர்ஷ்டமான நேரமிது. பெரிய புதையலே கிடைக்க வேண்டிய தருணம். ஆனால் அவன் நல்வழியில் வாழாததால் வெறும் ஐநூறு ரூபாயோடு அவன் அதிர்ஷ்டம் முடிந்தது” என கூறினார்.

இறைவன் கூறுவதை நன்கு கவனியுங்கள். “ரமேஷ் நல்வழியில் வாழாததால் அவனுக்கு கிடைக்கவிருந்த மாபெரும் அதிர்ஷ்டம் நழுவியது” என்று தானே தவிர, “அவன் என்னை வணங்காததால்” என்று இறைவன் கூறவில்லை.

 (ஆண்டவனை நீங்க ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பது ஒரு விஷயமல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் உங்கள் செயல்பாடு இருக்கிறதா என்பதே விஷயம்!)

தீயவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இறைவன் அருள் செய்யும் விதம் எப்படி என்று இப்போது புரிந்திருக்குமே!

Leave a Reply